வை. மு. கோ. 103-வது நாவல்
16
காரியத்தை நீ முதலில் கவனித்துச் செய்யா விட்டால், எது எப்படி நடக்கும் என்று சொல்லமுடியாது. நீ சொல்லும் நொண்டிச் சாக்கு இனி எனக்கு வேண்டாம். அண்ணன் ஒரு தேவதாசியை ரிஜிஸ்தர் மணம் செய்யப் போகிறான்; தம்பி எந்த ஜாதிக்காரியை இழுத்துக் கொண்டு ஓடப் போகிறானோ ? என்று இப்போதே சுற்று வட்டாரங்களில் பெரிதாக கலாட்டா செய்து, என்னிடம் நேரிலேயே பேசுகிறார்கள். இந்த அவமானத்தை விடப் பெரியதா, அண்ணனுக்கு முன்பு எனக்கு மணம் செய்வது?”.
என்று வெகு ஆத்திரத்துடன் கூறியதைக் கேட்ட கிருஷ்ணவேணியம்மாள் அதை ஆமோதிக்கும் முறையில், “இதோ பாரு கமலம்! இவன் சொல்வது மிகவும் சரியான பேச்சு. உன் மூத்த மகன் என்னவோ சீர்திருத்தவாதி என்றும், சமூகத் தொண்டு செய்து புரட்டி விடப் போகிறேன் என்றும், ஏதேதோ பறைசாற்றி, மக்களை ஏமாற்றுகிறான். தகாத முறையில் ரிஜிஸ்தர் மணம் செய்த பிறகு, ஏற்கெனவே உள்ள கரும்புள்ளியுடன் இதுவும் சேர்ந்தால், யார் பெண்ணைக் கொடுப்பார்கள்? என் தம்பியின் மகள் தாராபாய் வெகு அழகாயும், புத்திசாலியாயும் இருக்கிறாள்! அவளை மணம் முடித்து விடு. நான், இன்றே அதற்கான ஏற்பாடுகளும் செய்து விடுகிறேன். நீ இனி மேலும், மூத்த மகனின் பொய் பித்தலாட்டங்களை நம்பி ஏமாறாதே. இவனுக்கு நீ சரியான சமயத்தில் விவாகம் செய்யா விட்டால், இவனும் தகாத வழியில் போய் விட்டால், உன் குடும்பம் உருப்படுவது எப்படி? உன் மருமகப்பிள்ளைகளும், சம்மந்திகளும் உன்னை ஏசிப் பேசிக் கேலி செய்ய மாட்டார்களா? இதனால், உன் பெண்களுக்குச் சிறுமையல்லவா விளையும்! உன்னிடம் அனுப்புவார்களா? பிறந்தகத்தின் சீரும், சிறப்பும் அறவே மறைந்து விடுமானால், அந்தப் பெண்களின் உள்ளம் உடைந்து, வியாதியில் வீழ்ந்து விட்டால், உன் கதி என்னவாகும்” என்று வெகு கனிகரத்துடன், கார ஸாரமாய்க் கூறி, மனத்தைக் கலைத்து, சரியானபடி தூப, தீபம் போட்டு உடுக்கையடித்தாள்.