உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

சாந்தியின் சிகரம்

இரவு வெகு நேரம் வரையில், ஸ்ரீதரன் வீட்டுக்கு வரவில்லை. இங்கேயே இருந்து நிமிடத்திற்கு நிமிடம் கவனித்துப் பின், இனி உயிருக்கு பயமில்லை என்று தோன்றிய பிறகே, ஸ்ரீதரன் வீட்டிற்குக் கிளம்பினான். துளஸிபாயும், நல்ல தேர்ந்த நர்ஸைப் பக்கத்தில் இருந்து கவனிக்கும்படிச் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

அந்தம்மாளுக்குக் கார் கிடையாது. ஆகையாலும், காலம் அகாலமாகி விட்டதாலும், ஸ்ரீதரன் தானே அவளைக் கொண்டு வீட்டில் விட்டு விடுவதாயும், கூட வரும்படியாயும் கூப்பிட்டான்.

என்ன உலக விசித்திரம்! சற்று நேரத்திற்கு முன்பு, உலகமே இருண்டு போய்த் துக்கக் கடலில் மிதந்து தவிப்பது போல், துள்ளிக் கொண்டிருந்தவர்களான நோயாளியின் தாயார், அத்தை முதலிய பெண்கள், தங்கள் மகளுக்குச் சற்று குணமாகி வருவதைக் கண்டு, எத்தனை பொங்கிப் பூரிக்கலாமோ, அத்தனையும் பூரித்தார்கள்! முதலில் கரை காணாத துக்கம்!… பிறகு நிகரிலாத சந்தோஷம்!

அதே சமயம், இந்த இரு டாக்டர்களும் சேர்ந்து போவதாகப் பேசிக் கொள்வதைக் கண்டதும், குபீரென்று கள்ளப் பார்வையும், வம்புப் பேச்சும், அநியாய எண்ணத்துடன் கூடிய வித்யாஸ நினைப்பும் உண்டாகி, குசமசவென்று பேசிக் கொள்வதையும் கூர்மையாக ஸ்ரீதரன் கவனித்துத் தனக்குள் வியப்புற்றான்.

“மக்களின் உணர்ச்சி இத்தகைய பச்சோந்தியைப் போன்றதா? துக்கத்தில் துடித்துச் சந்தோஷத்தில் திளைக்கும் போது, வம்புக்கும், கள்ளப் பேச்சுக்கும் கூட, அதே மனத்தில் எப்படித்தான் இடம் கிடைக்கின்றதோ? ஆகா! ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா? உலகமே! நீ எத்தனை விதமான விசித்திரங்களைத்தான் கண்டு வியக்கிறாய்! உனக்கு சலிப்போ, வெறுப்போ ஒரு உணர்ச்சியும் இல்லையா?… பச்சைக் குழந்தையைப் போல் நீயும் இருக்கிறா-