வை.மு.கோ. 103-வது நாவல்
46
தூக்கமும் பிடிக்கவில்லை. எப்படியும் கடிதம் சின்ன மகனிடந்தான் இருக்க வேண்டுமன்றி, எங்கும் போயிருக்க முடியாது. இக்கடிதத்தை அவன் அசட்டுத்தனமாய்ப் பிறருக்குக் காட்டி, நம் குடும்பத்தின் குட்டை வெளியிடுவதற்கு முன்பு இதை எப்படியாவது நாம் கொண்டு வந்து விட வேண்டும் என்ற அதிதீவிரமான எண்ணம் இதயத்தில் புயலடிப்பதால், அந்த வேதனையும், நினைவும் ஒன்று கூடி, எப்படியோ ஒரு அசுர தைரியத்தைக் கொடுத்தது.
கடவுளை எல்லாம் வேண்டிக் கொண்டாள். மெல்ல எழுந்து, ஒரு கறுப்புப் போர்வையை எடுத்துத், தன் கால் முதல் தலை வரையில் மூடி முக்காடிட்டுக் கொண்டு, அஸல் பயங்கரக் கள்ளனோ ? அன்றி பேயோ! பிசாசோ! என்று நடுங்கும்படியான விதம் மூடிக் கொண்டு, அவ்விடத்தை விட்டு சின்ன மகன் படுத்துள்ள விடுதிக்குச் சென்றாள். மணி சரியாக 12 அடிக்கும் சமயமாயிருந்தது. தாமோதரன் அயர்ந்து தூங்குவதைக் கவனித்தாள். ஓசை செய்யாமல், அவனுடைய ஜேபியிலிருந்து பெட்டி சாவியை எடுத்துக் கொண்டாள். தன் வாழ்நாளில், என்றுமே இத்தகைய செய்கையைச் செய்தறியாதவளாதலால், சரீரம் கிடுகிடு என்று நடுங்குகிறது.. எப்படியாவது கடிதத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டால் போதும்… என்கிற எண்ணத்துடன் பெட்டியை ஓசை செய்யாமல் திறந்து, சத்தம் செய்யாமல் கடிதங்களைப் புரட்டிப் பார்த்தாள்.
முதல் முதல் பார்க்கும் போதே, இவள் நாடி வந்த கடிதம் கிடைத்து விட்டதோடு, இன்னும் இரண்டு மூன்று கடிதங்களும் அதில் பத்திரப்படுத்தி இருந்ததையும் எடுத்துக் கொண்டு, பெட்டியை ஓசை செய்யாமல் பூட்டி விட்டுச் சாவியைத் தலையணையின் மீது வைக்கும் போது, தாமோதரன் சற்றுப் புரண்டு படுத்தவன், தற்செயலாகக் கண்ணை, விழித்துப்பார்த்தான்.