உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

சாந்தியின் சிகரம்

தற்காலத்து நாகரீகப்படிக்கு யாரையாவது குறி வைத்திருக்கிறாயா! அதையும் அம்மாவிடம் சொல்லி விடு. உடனே, நான் அதை முடித்து விட்டு, மறு காரியம் பார்க்கிறேன்… எனக்கு நேரமாகிறது. ஆஸ்பத்ரிக்குப் போக வேணும்… சாயங்காலம் நான் வந்து, மறுபடி உன்னைப் பார்க்கிறேன். இன்று நீ அதிகம் அலையாது, பூர்ண ஓய்வு எடுத்துக் கொண்டு, நன்றாக யோசனை செய்து முடிவு கூறு. இந்த பிசாசு விஷயம், பிசாசாகவே இருக்கட்டும். இந்த வெட்கக்கேடான விஷயத்தை வெளியில் சொல்லாதே” என்று மடமடவென்று கூறி விட்டு, நேரே தன் தொழிலை நோக்கிச் சென்றான்.

எந்தெந்த விஷயம், எப்படி எப்படி எல்லாம் மாறி எப்படி முடிந்தது! என்கிற வியப்பொரு புறம்; தன் பிதாவின் ஆதி லீலைகளால், இத்தகைய குடும்பம் வ்ருத்தியாகியிருப்பது உண்மையாயிருக்குமா! என்கிற ஆச்சரியம் ஒரு புறம். பலவிதமான குழப்பத்துடன் படுத்திருக்கும் தாமோதரனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. தன் அண்ணன் சொல்லியதெல்லாம் உண்மையாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; என் விவாகத்தை முதலில் செய்வதற்கான வழி பிறந்ததே போதும் என்கிற எண்ணமும், ஆவலும் தலை தூக்கி நின்று, புதிய உணர்ச்சியைக் கொடுத்தது.

அதே நிலையில், ஏதேதோ எண்ணி கற்பனை உலகில் சஞ்சரிக்கும் போது, முதல் நாள் கண்டெடுத்தக் கடிதத்தின் நினைவு பளிச்சென்று வந்ததும், முதலில் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதே சமயம், இவனுக்கு ஒரே ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடிய உஷாவிடமிருந்து, கடிதத்தை ஒரு பையன் கொண்டு வந்து கொடுத்தான். உடனே நினைவு இதில் மாறி தாவி விட்டதால், பெட்டியை அப்படியே வைத்து விட்டு, இக்கடிதத்தைப் படிக்கவாரம்பித்தான்.

சா—5