உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

68

பிடித்துக் கொண்டு, ”டாக்டர்! உங்களிடம் நான் வைத்துள்ள கரை காணாத அன்பிற்கு, இந்த அல்ப துகையொரு மதிப்பேயல்ல. என்னிதய பூர்வமாய், என்னுடைய செல்வியான பாமாவை உங்கள் வாழ்க்கைத் துணைவியாகக் கொடுத்து, அவளுடன் குறைந்தது 50 ஆயிரம் ரூபாயாவது ஸ்ரீதனமாகக் கொடுக்க, என்னுள்ளம் ஆவல் கொண்டு தவிக்கிறது. சீமைக்குச் சென்றுள்ள என் மகள், அடுத்த வாரத்தில் வருவதாகக் கடிதம் வந்து விட்டது. அவளுடைய குணத்தழகையும் சரி; ரூப லாவண்யத்தின் விசேஷத்தையும் சரி! ஒரு விதத்திலும் குறை சொல்லவே முடியாது. ஏதோ! என் பெண் என்று நான் பெருமை படுவதாக நினைக்கக் கூடாது. அவளுடைய படிப்பைப் பற்றியும், நான் மிக மிகப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். இந்த ஜில்லாவுக்கே முதல் தரமாக M. A. பாஸ் செய்திருக்கிறாள். மேல் நாடு சுற்றிப் பார்க்கும் ஆசையினாலும், சில விஷயங்கள் ஆராய்ச்சிப் படிப்பிற்காகவும் போயிருக்கிறாள். அடுத்த வாரம் வருவதற்குள், இந்த ஏற்பாட்டை நாம் தீர்மானித்து வைத்து விட்டால், அவள் வந்ததும் காரியத்தை முடித்து விடலாம். என் வார்த்தைக்கு மறு பேச்சே பேச மாட்டாள். இக்காலத்திய சில பெண்களைப் போல் தத்தாரியாய் தாந்தோனியாய்த் திரிய மாட்டாள். அடக்கமும், மதிப்பும், பக்தியும் கொண்டவள்; ஆகையால், இதைப் பூர்த்தி செய்ய வேணும், டாக்டர்!” என்று தன்னுள் கொந்தளிக்கும் ஆர்வம் பூராவும் காட்டி, வேண்டிக் கொண்டார்.

இம்மாதிரி விஷயம் ஒன்றை இவர் கேட்கப்போகிறார் என்று, ஸ்ரீதரன் சொப்பனங்கூட காணவில்லை. இந்த கேள்வி இவனுக்கு ப்ரமாதமான வியப்பைக் கொடுத்தது. இது போல், இன்னும் பல பேர்கள் இவனைக் கேட்டிருக்கிறார்கள்; ஏன்! சில இடங்களில், இவனால் வைத்யம் செய்துக் கொள்ளப்பட்ட பெண்களே இவனை மணக்க ஆசை கொண்டு, வலுவில் கேட்டிருப்பதையும் இவன் கண்டு, வெறுத்தும் இருக்கிறான். இத்தகைய செய்கைகளினால்