உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. செக்கிழுத்த செம்மல்
சிதம்பரனார்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்.

வாழ்வு

பாண்டிநாட்டுச் சீமையில் ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்றோர் அமைதியான சிற்றூரில் வாழ்ந்தவர் கவிஞர் சிதம்பரம் பிள்ளை ஆவர். அவர் தம் பேரனாரே நம் பாராட்டிற் குரிய சிதம்பரனார் ஆவர். சிதம்பரனாரின் பெற்றோர் உலகநாத பிள்ளையும் பரமாயி அம்மையாரும் ஆவர். இவர் பிறந்தது 5-8-1872ல் ஆகும். இவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராக வீரப்பெருமாள் அண்ணாவியாரும், பள்ளியாசிரியராக அறம் வளர்த்த நாத பிள்ளையும் அமைந்தனர். தூத்துக்குடி புனிதசவேரியார் உயர் பள்ளியிலும் கால்டுவெல் கல்லூரியிலும் கல்வி கற்று 1891ஆம் ஆண்டு ‘மெட்ரிகுலேசன்’