பக்கம்:சாமியாடிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

சு. சமுத்திரம்

மாதிரி. பூக்கள் மொய்த்த அந்த ரோசாச் செடியையே வேருடன் பிடுங்குவது போல் பூக்களைப் பறித்தான். மூன்று பூக்கள். ஒரு மொட்டு. நான்கையும் அவளிடம் நீட்டிவிட்டு, ஏதோ பேசப்போனான். பிறகு அவனுக்கு வெட்கம் வந்தது. ஒடிப்போய் துளசிங்கம் பக்கத்தில் நின்று கொண்டான்.

கோலவடிவு, அக்கினி ராசாவைப் பாவமாகப் பார்த்தாள். துளசிங்கத்தையும் பாவமாகப் பார்த்தாள். அவனோ, அவள் பக்கம் சட்டென்று திரும்பிவிட்டு, அதே வேகத்தில் முகத்தை ராமையாவின் முன்னால் நிறுத்தினான். கோலவடிவு, தலையில் பூ வைக்கும் சாக்கில் அங்கேயே நின்றாள். அவள் போகட்டும் என்று பேச்சை நிறுத்திய துளசிங்கம், பிறகு அவள் ஒரு பொருட்டல்ல என்பதாய்ப் பேச்சை விட்ட இடத்தில் இருந்து துவங்கினான்.

"ஒமக்கு எப்டி சின்னய்யா நஷ்ட ஈடு கொடுக்க முடியும்."

"என்னடா பேச்சுப் பேசற. ஒன் உரத்த வாங்கி, இந்த ஆறு மரக்கால் விதப்பாடு அவ்வளத்துலயும் போட்டேன். மற்ற வயலுல நெல்லுப் பயிருவ. குட்டையாய் நிக்கும்போது என் வயலுல பயிரு நெட்டையா சிலுசிலுன்னு வளர்ந்ததுல சந்தோஷப்பட்டேன். இப்போ பயிருல்லாம் சாவியாய் போயிட்டேடா. இவ்வளவுக்கும் மத்த வயலுக்காரங்க மாதிரிதான் தண்ணி பாய்ச்சுனேன். பூச்சி மருந்து அடிச்சேன். எல்லா பயிரும் நெல்லுக் கதிரச் சுமக்கும் போது, என் நெற்பயிரு மலடி மாதிரி சாவியாயிட்டடா. ஒன் உரத்துலதான் ஏதோ மிஸ்டேக்கு."

"சரி. கத்தாதேயும். எனக்கு மறந்து போச்சு. என்ன உரம் வாங்கினிரு."

"பொட்டாசியம். சீம உரம்."

"ஒ. அதுவா. இப்போ நல்லா ஞாபகம் வருது. அந்த உரத்தோட யூரியா உரத்த கலந்து போடணுமுன்னு அக்கினி ராசா கிட்டே முருகன் கோவில் முன்னால் சொன்னேன். இல்லியா அக்கினி."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/114&oldid=1243571" இலிருந்து மீள்விக்கப்பட்டது