பக்கம்:சாமியாடிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சாமியாடிகள்


1

அந்த ஆலமரத்தின் அடியில், அத்தனை பெண்களும் கையும் பீடி இலையுமாய், வாயும் பேச்சுமாய், தட்டும் மடியுமாய், தலையில் வைத்த பூக்கள், அவர்களின் தளிர்மேனி செடியில் பூத்து நிற்பதுபோல் பொலிவு காட்ட, முன்னாலும் பின்னாலும் லேசாய் ஆடியாடி, முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருந்தனர்.

சட்டாம்பட்டியின் 'கிழக்கு ஊரின்' மேற்கு பக்கமாய் உள்ள காளி கோயிலுக்கு முன்னால், அம்மனே நிரந்தரி என்று சொல்வதை நிரந்தரப்படுத்துவது போல் குடை பிடித்து தோற்றம் காட்டும் அந்த ஆல், மேலே சிறகாட்டும் பறவைகளும், கீழே உடம்பாட்டும் பெண்களுமாய் கலகலத்தது. அந்த ஆலமரமே ஒரு ஆளாகி, டி.வி. மகாபாரதத்தில் வந்ததே "காலம்", அதுபோல், ஊருக்கு எதையோ உபதேசித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. விழுதுகளே சடைமுடியாக, உச்சி இலை தழைகளே தலை முடியாக, ஆலம்பழங்களே உத்திராட்சக் கொட்டைகளாக, அந்த ஆல ரிஷி எல்லோரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமையைக் கொடுத்தது. இந்த மரம் அங்கே இருப்பவர்கள் பிறப்பதற்கு முன்பே பிறந்த மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/9&oldid=1243669" இலிருந்து மீள்விக்கப்பட்டது