உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

சாயங்கால மேகங்கள்

மனத்தாங்கல் உள்ள அத்தனை ஆசிரியர்களிடமும் கையெழுத்து வாங்கி டி.இ.ஓ. கல்வித்துறைச் செயலாளர், மத்திய கல்வி போர்டு, அமைச்சர்கள் ஆசியோருக்கு அனுப்பும்படி யோசனை கூறியிருந்தார் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி.

பூமியும் சித்ராவும் வேறு வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மகஜரைத் தயாரித்து அதை டைப் செய்வதற்கும், பிரதிகள் எடுப்பதற்குமாகப் பத்து ரூபாய் வரை கைப்பணத்தைச் செலவழித்தார்கள். மகஜரின் கீழே முதல் கையெழுத்தைச் சித்ராவே போட்டாள். மற்றவர்களின் கையொப்பங்களை வாங்க முயன்றபோது அவர்கள் ஒவ்வொருவராகச் சாக்குப் போக்குச் சொல்லி நழுவ முயன்றார்கள். ஒதுக்கினார்கள். தட்டிக் கழித்தார்கள்.

“கையெழுத்தெல்லாம் வேண்டாம்! நம்ப முயற்சி பலிக்காமப் போயி யார் யார் கையெழுத்துப் போட்டு மகஜர் அனுப்பினோம் என்கிற விவரம் எப்படியாவது மேனேஜ்மெண்டுக்குத் தெரிஞ்சு போச்சுன்னா நம்மைப் பழி வாங்கிடுவாங்க. அதனால் யார் பேரையும் கீழே போடாமல் மகஜரை டைப் செஞ்சு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள்னு மட்டும் மொட்டையா எழுதி தபாலில் போட்டுவிடலாம்.” என்று சித்ராவுக்கு அவர்களே மாற்று யோசனை வேறு கூற முன்வந்தார்கள்.

“கையெழுத்துப் போடப்படாத மொட்டைக் கடிதாசியை யாரும் மதிக்க மாட்டார்கள். அம்மாதிரிக் கடிதங்களை அடிப்படையாக வைத்து எந்த அதிகாரியும் மேல் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். கையெழுத்துப் போட்டு விலாசத்தோடு அனுப்புகிற முறையான கடிதங்களைக் கவனிக்கவே சர்க்கார் அலுவலகங்களில் மாதக் கணக்கில் ஆகும்போது மொட்டைக் கடிதாசியை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்று சித்ரா சுடச் சுடக் கேட்டாள். அவர்கள் பதில் பேசாமல் விழித்தார்கள்.

அவளுடைய கேள்விக்குப் பின்பு மகஜரில் இன்னொரு கையெழுத்து வந்தது. அது அவளுடைய தோழியும் சிநேகிதியுமான தேவகியின் கையெழுத்து.