சாயங்கால மேகங்கள்
267
தீவிரமாயிருந்த காளத்திநாதனையே இப்போது ஏன் அங்கே காணவில்லை என்பது புரியாத புதிராயிருந்தது. மர்மமான முறையில் அவர் தலைமறைவாகியிருந்தார்.
அன்று காலை பூமியும், போலீஸ் குழுவினரும் எத்தனை வேகமாக அந்தத் தீவில் இறங்கிச் சோதனை செய்தார்களோ அத்தனை வேகமாக விசைப்படகில் கரைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பூமிக்கு எல்லாமே ஒரு ஏமாற்று நாடகம் போலிருந்தது.
“மிஸ்டர் பூமிநாதன்! இனிமேலாவது இப்படிப் பொறுப்பற்ற முறையில் வந்து நம்பத்தகாத பெரிய புகார்களைச் செய்யாதீர்கள்! வீண் அலைச்சலும் காலவிரயமும்தான் கண்ட புலன்” என்று போலீஸ் மேலதிகாரி அவனை எச்சரித்து விட்டுப் போனார்.
பூமி லஸ் முனையில் போலீஸ் லாரியிலிருந்து இறங்கியதும் நேரே சித்ராவின். வீட்டுக்குச் சென்றாள். அப்போது காலை பத்தரை மணிக்கு மேலாகியிருந்தது. முதல் நாள் இரவு முழுவதும் உறங்க முடியாமற் போனதும், சோர்வும், கடைசியாகக் காலையில் அடைந்த பெரிய ஏமாற்றமும் அவனைத் தளரச் செய்திருந்தன. உடல்தான் தளர்ந்திருந்தது. உண்மையைக் கண்டு பிடிக்கவும், நீதி நியாயங்களை நிலை நாட்டவும் தொடர்ந்து இப்படி இன்னும் பல இரவுகள் விழிக்க வேண்டி நேர்ந்தாலும் கவலைப்படக் கூடாது என்று மனம் என்னவோ உறுதியாகத்தான் எண்ணியது.”
அவன் போனபோது வீட்டுச் சொந்தக்காரருக்கும் சித்ரா வுக்கும் ஏதோ பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. ஒரே கூப்பாடு மயம். அவர் இரைய அவள் பதிலுக்கு இரைய நடுவே சித்ராவுடன் தங்கியிருந்த அந்தப் பையனின் தாயும் இரைய அங்கு ஒரே கூச்சலாயிருந்தது. பூமியைப் பார்த்ததும் ஒரு விநாடி பேசுவதை நிறுத்தி மெளனமடைந்த அவர் மறு விநாடி அவனிடமே “இந்தாப்பா! இது கெளரவுமானவங்க குடியிருக்கிற இடம்! கண்ட