பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
XV

இம்முன்னுரையில் இடமில்லை. இருந்தாலும், இவற்றில் மூன்று கதைகளை சிறிதே சொல்லியாகவேண்டும். “வாழ்க்கைப் பாக்கி” என்னும் கதை, சிற்பம் செதுக்கப்பட்டது போன்ற சொற்கட்டமைப்பும், பனிநீரில் மலர்ந்து சிலிர்ப்பூட்டும் ரோஜாவைப் போன்ற உருவ அழகும், கருத்தழகும் பெற்று, நம் மனதில் அதிர்ச்சியையும், அலைக்கழிப்பையும் ஏற்படுத்தி, "அடச்சீ... இப்படியுமா பணத்தை முன்னிலைப் படுத்தி , தாய்க்கும், பிள்ளைகளுக்குமான பந்தபாசம் உருப்பெறவேண்டும்?" என்ற கேள்வியை முன்னிறுத்துகிறது. தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு கிடைத்த பொக்கிசம் இது. பிற மொழிகளுக்கு அறிமுகப்படுத்த ஒரு பத்து கதைகளைத் தேர்வு செய்தால் “வாழ்க்கைப் பாக்கி” அதில் ஒன்றாக இருக்க முடியும்.

சோசலிச யதார்த்தவாத கதைகள்

“வைராக்கிய வைரி” - “சிக்கிமுக்கி கற்கள்” - இந்த இரண்டு கதைகளும் நான் விழையும் ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் போராட்ட உணர்வை வெளிப்படுத்துவதாகும். இரண்டிலும் பெண்களே வெளிப்படுகிறார்கள். தமிழில் சோசலிச யதார்த்தவாதக் சிறுகதைப் படைப்பு, இதற்கு முன் ஏதேனும் உருவாக்கியிருந்தாலோ அல்லது இதுவாக இருந்தாலோ அத்துறையின் முன்னோடிகளில் மூலவராகிறார் சமுத்திரம். அப்படியான ஒரு சிறப்பு, இவ்விருகதைகளுக்கும் கிடைத்திருக்கிறது எனலாம். இத்துவக்கம், கொப்பும், கிளையுமாகப் படருமானால், தமிழ்ச் சிறுகதை இயக்கம் புரட்சிகரமான, சமூக மாறுதலுக்கான பங்களிப்பை ஆற்றும் பெருமையை பெற்றளித்திருக்கிறது என்று பூரிப்படையலாம். அப்பூரிப்பில், சமுத்திரம் பொங்கும்.