பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

சிக்கிமுக்கிக் கற்கள்

பார்வதி, ஒரு பள்ளப்பகுதியில், தோளுக்குக் கீழே அரையடி நீளத்தில் தொங்கிய கைச்சதை அங்குமிங்குமாய் ஆட, வலதுகையால், ஊராட்சிப் பம்பின் இரும்புச் சடையை மேலும் கீழுமாய் ஆட்டுகிறவரை, தன் சுமை மறந்தும் - மறுத்தும் பரிதாபமாய் பார்க்கிறாள். ஒத்தைக்கையாலேயே கல் உடைக்கிறவர். அந்த பாவப்பட்ட மனிதரை பார்த்தபடியே பின்பக்ககமாய் நடக்கிறாள்; நடந்து நடந்து, ஒரு பூவரசு மரத்தின் பக்கமாய் வருகிறாள். ஒரு பெண் கூட்டம், கல்லும், கைப்பிடி சம்மட்டியுமாய் இயங்குகிறது. இவள் வேலை பார்த்த இடம்.... இவளோடு தாயாய் பிள்ளையாய் பழகிய பெண்கூட்டம். அவர்களை பார்த்தபடியே மெளனமாய் நிற்கிறாள். அவர்கள் கையிலும் காலிலும் ரத்தத்துளிகள்... ஒரு சம்மட்டித் திசைமாறி, ஒருத்தியின் பெருவிரலை ரத்த முலாமாக்குகிறது. கீழ்நோக்கிப் பாயும் சம்மட்டிகளை கற்கள் மேல்நோக்கியே திருப்புகின்றன. சரணடைய மறுக்கின்றன. இந்தப் போரில் சக்கைக்கற்களில் இருந்து தெறிக்கும் துக்கடா கற்களும் துகள்களும் மேலெழும்பி ஒருத்தியின் குனித்த முகத்தில் உதட்டை வீங்க வைக்கிறது. இன்னொருத்தியின் மூக்கிற்குள் நுழைந்து மூச்சைப் தடுக்கிறது. எல்லாப் பெண்களும் சேர்ந்தாற்போல் நிமிர்ந்து முதுகுகளை பின்பக்கமாக வளைத்துவிட்டு, பூவரசுத்துரில் சாய்ந்து கிடக்கும் கையுடைப்பு மேஸ்திரியைப் பார்க்கிறார்கள். ஒருத்தி. எல்லோரையும் கையமர்த்திவிட்டு பேசுகிறாள்.

"இது சொரிக்கல்லு மேஸ்திரி. சில்லி சில்லியாய் தெறிக்குது. இதை ஒடைச்சா ஒடம்பே ரத்தக்காடாயிடும். மாவுக்கல்ல கொண்டுவாங்க".

அந்த மரத்தின் வேர் போல் கிடந்த, கையுடப்பு மேஸ்திரி எக்காளமாய் சிரித்தபடியே சொரிக்கல் சூட்சமத்தைச் சொல்கிறார்.

"உண்ட இடத்துக்கு ரெண்டகம் செய்தவளோட உறவாடுற உங்களுங்கு. இந்த மாதிரி சொரிக்கல்லத்தான் கொடுக்கணுமுன்னு உத்தரவு. வேணுமுன்னா வேலை செய்யுங்க... வேண்டாட்டிப் நடையக்கட்டுங்க... இந்த பார்வதியே உங்களுக்கு கூட்டுறவு சங்கத்துல வேலை வாங்கிக் கொடுப்பா... ஏம்மா! இன்னும்மா... நீ இடத்தைக் காலி பண்ணல? நாங்க சொன்னத லேசா எடுத்துக்காதம்மா.... இல்லன்னா போலீஸ் வைச்சு..."