பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஒருவழிப் பாதை


ஆனால் அக்கெளண்டண்ட் சிங்காரம், அலட்சியமாக மேலே ஓடும் மின்சார விசிறியைப் பார்த்தான். பிறகு கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையை அலட்சியமாக புரட்டினான். இந்த அலட்சியத்தை மானேஜர் இளைஞன் லட்சியம் செய்தவன்போல், கோபமாகக் குறிப்பிட்டான்.

'லேட்கம்மிங் ஒரு சமூக விரோத செயல்..." நான் சும்மா இருக்கமாட்டேன்.

ஊழியர்கள், மானேஜருக்குப் பயப்படுவதுபோல், தத்தம் கைகால்களை ஆட்டிக் கொண்டார்கள். சிங்காரம் மட்டும் 'ஒனக்கு ஒரு திறமை இருந்தால்... எனக்கும் ஒரு திறமை இருக்கு... நீ என்ன சொல்றது... நான் என்ன கேட்கிறது' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே, அலட்சியமாக பத்திரிகை ஒன்றைப் புரட்டினான்.

மானேஜரின் பார்வை, அவன்மேல் அடிக்கடி விழுவதை ஊழியர்களும் பார்த்துவிட்டார்கள். மானேஜர் வாலிபன் 'அட்வைஸ்' முடித்துவிட்டு, தனது ஏர்கண்டிஷன் அறைக்குள் போனான். அவனை எப்படி மடக்கலாம் என்று மானேஜரும், ஆசாமி மீது எப்படி மொட்டைப் பெட்டிஷன் போடலாம் என்று அக்கெளண்டண்டும் நினைத்துக் கொண்டதால் அன்று இருவருமே எந்த ஃபைலையும் பார்க்கவில்லை.

இரண்டு மூன்று நாட்கள் ஓடின.

அக்கெளண்டண்ட் சிங்காரம், தான் நடந்து கொண்டதற்கு வருத்தப்பட்டான். என்ன இருந்தாலும் எவ்வளவு திறமை அவனிடத்தில் இருந்தாலும், அவன் மேனேஜருக்கு கிழே வேலை பார்ப்பவன். ஆகையால், அடுத்த தடவை அவரைப் பார்க்கும்போது, மிகமிகப் பணிவாக நடந்து கொள்வதென்று தீர்மானித்தான்.

'அடுத்த' தடவை வந்தது. கம்பெனியின் நுழைவாயிலில் காரில் இருந்து இறங்கிய மேனேஜரைப் பார்த்து, ஸ்கூட்டரில் இறங்கிய சிங்காரம், 'குட்மார்னிங் ஸார். ஆபீஸிற்கு வாரீங்களா' என்று கேட்டு வைத்தான்.