பக்கம்:சிதறல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அதே சன்னல் எனக்கு எவ்வளவோ உதவியிருக்கிறது. கன்னிப் பெண்ணுக்கும் சன்னலுக்கும் உள்ள உறவை ஒரு காவியமாகவே எழுதலாம். என்ன செய்வது வீட்டிலே பொழுது போகாது. சுற்றிச் சுற்றி வருவேன். வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. ஆனால் இந்த வெளியுலகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பிடித்துத்தள்ளும் 'வயசு பொண்ணு' என்று எனக்கு முத்திரை குத்தி வைத்தார்கள்.

என் அம்மா எடுத்ததற்கு எல்லாம், இதைச் சுட்டிச் சுட்டிக் காட்டுவாள். வயசான கிழவர்களையும் கூடத்தான் இந்த உலகம் இப்படிச் சுட்டிக் காட்டுகிறது. கிழவருக்கு வயதுஆகிவிட்டது. நாங்கள் வயதை எட்டிப்பிடிக்கிறோம்.

அதே சன்னலை இந்தக்கண்கள் ஊடுருவிப் பார்க்கும். இந்த உலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். 'வயது' உள்ளவர்களைப் பார்ப்பதில் என் உள்ளத்துக்கு ஏன் ஆசை அது தெரியாது. எனக்கு ஆண்களைப் பார்க்கப் பிடிப்பது இல்லை. அந்தச் சன்னலிலும் யாராவது பெண்கள் அழகான சேலையுடுத்திச் சென்றால் பார்த்துக்கொண்டு இருப்பேன். அவள் அழகை ரசிக்கமாட்டேன்; சேலையைத் தான் ரசிப்பேன். பெண்மனமே தனி இந்த வகையில் என்பதைப் பின்னால் எண்ணிப் பார்த்து இருக்கிறேன்.

பாட்டிக்கு என்னைப்பற்றி என்ன தெரியும். அவள் லட்சியம் எல்லாம் நான் என் கணவனோடு வாழவேண்டும் என்பது. நனவோட்டம் என்னும் நாவலைப் படித்து இருக்கிறேன். அதில் உஷா வாழாவெட்டியாக மாறிவிட்டாள். அவளுக்கு என்ன துணிச்சல், துணிந்து மறுவிவாகம் செய்துகொண்டுவிட்டாள். அந்த ஆசிரியர் மிகவும் துணிச்சல்காரராகத்தான் இருக்க வேண்டும். ஒரு பெண் துணிந்து விவாகரத்து செய்துகொள்ள வழிகாட்டுகிறார். அது பெண்ணுரிமைக்குப் போராடும் எழுத்தாக உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/22&oldid=1258283" இலிருந்து மீள்விக்கப்பட்டது