பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


கலி : ஆ! உன் சொற்கள் என்னைத் திரும்பவும் உயிர் பெறச் செய்கின்றன. என்ன செய்யப்போகிறாய் சொல்!

லிகு : கூடிய சிக்கிரம் அதைச் சொல்கிறேன். இப்போது உம் வீட்டுக்குத் திரும்பு. நான் மெசர் நிக்கியா பிரபுவை கூட்டிக்கொண்டு வந்தால் சொன்னபடி நடந்துகொள்.

கலி : அப்படியே செய்கிறேன். ஆனால் நீ ஊட்டும் இந்த நம்பிக்கையெல்லாம் புகைபோல் மறைந்துபோய் விடுமோ என்றுதான் பயமாயிருக்கிறது!

காட்சி : 2
(கணவன் மெசர் நிக்கியாவும் தரகன் லிகுரியோவும் வருகிறார்கள்)

லிகு : ஆண்டவனேதான் இந்த மனிதனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார். பாரிஸ் பட்டனத்தில் அதிசயங்கள் புரிந்தவர் இந்த வைத்தியர். இங்கே பிளாரென்சில் ஏன் தொழில் தொடங்கவில்லை என்று ஆச்சரியப்படாதீர்! பணம் சேர்ந்துவிட்டது. அதனால் தொழிலில் அவர் அக்கறை காட்டவில்லை. இந்த மனிதன் வைத்தியம் பார்க்கிறேன் என்று ஒப்புக் கொள்வதுதான் பெரிய காரியம். ஒப்புக்கொண்டு விட்டால், முடியும் வரை இருந்து ஒருகை பார்த்துவிடுவான்.

மெசர் நிக்கியா : முதலில் அந்த ஆளைப் பார்த்துப் பேசுகிறேன். சரியான ஆள் என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் அவரை வசப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டியதெல்லாம் உன் பொறுப்பு.

லிகு : அந்த ஆள் மட்டும் கெட்டிக்காரனாக இல்லையென்றால் நான் என் பெயரையே மாற்றி வைத்துக்கொள்கிறேன்.

நிக்கியா : சரி, வா போகலாம், அந்த வைத்தியர் வீட்டுக்கு.

(இருவரும் வந்து வீட்டுக் கதவைத் தட்ட வேலைக்காரன் சிரோ யாரென்று கேட்டு திறந்து விடுகிறான். வைத்தியர் உடையில் வாலிபன் கலிமாக்கோ உள்ளறையிலிருந்து வருகிறான்.)