பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ஆகையால், இவற்றிடம் அகப்பட்டுக் கொண்டவனுக்கு அழிவு நிச்சயம். கூலிப்படைகளோ ஒன்றாகச் சேர்ந்தேயிருப்பது இல்லை. அதுவும் தவிர, அந்த அரசனிடம் சம்பளம் வாங்குவதால், அவனுக்கு எதிராக ஒன்று கூடுவதில்லை. ஆகவே, மூன்றாவது. ஆளொருவன் கூலிப்படைகளின் துணையால் அவற்றின் உதவியைப் பெற்ற அரசனுக்குக் கேடு செய்ய முயல்வது என்பது சாதாரணமாக நடக்கக் கூடிய காரியமல்ல. ஒரே வார்த்தையில் விளக்கமாகச் சொன்னால் கூலிப்படைகளால் ஏற்படக்கூடிய பேராபத்து அவற்றின் கோழைத்தனத்தினால் ஏற்படுகிறது. ஆனால், இந்த உதவிப் படைகளால் ஏற்படக்கூடிய பேராபத்தோ அவற்றின் தைரியத்திலேயே இருக்கிறது.

மொத்தத்தில் தன் சொந்தப்படைகளின் உதவியால்தான் ஒரு மன்னன் பாதுகாப்பாக இருக்கலாம் என்று முடிவாகச் சொல்வேன். இல்லாவிட்டால் இடுக்கண் வருங்காலத்தில் அவன் நம்பியிருப்பதற்கு எந்தவிதமான ஏதுவுமில்லாததால் அவன் விதியை நம்பியிருப்பது தவிர வேறு வழியில்லை. தன் குடிமக்களையும் தன்னைச் சார்ந்தவர்களையும் கொண்ட சொந்தப்படைதான் ஓர் அரசனுக்கு என்றும் உதவியாயிருக்கும் மற்றவற்றால் என்றும் நன்மையில்லை.

அரசன் கடமை - போர்ப் பயிற்சி :

ஓர் அரசன் போரைப் பற்றியும், அதற்கு வேண்டிய படையமைப்பைப் பற்றியும், அந்த அமைப்பின் ஒழுங்கைப் பற்றியும் தவிர வேறு எதையும் குறிக்கோளாகக் கொள்ளவோ, நினைக்கவோ கூடாது. வேறு எதையும் தன் ஆராய்ச்சிக்குரிய பொருள்களாகக் கொள்ளக்கூடாது. ஏனெனில் ஆதிக்கஞ்செலுத்தக்கூடிய ஒருவனுக்குத் தேவையான கலை போர் ஒன்றுதான்! அரசரால் பிறந்தவர்களை அந்தத் தகுதியில் நிறுத்தி வைக்கக்கூடிய அறநெறியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட மனிதர்களையும் அந்தத் தகுதியுடையவர்களாகச் செய்யக்கூடிய கலை போர் ஒன்றே!

படையெடுப்பைக் காட்டிலும் இன்பக் கேளிக்கைகளைப் பற்றியே அதிகமாக எண்ணக்கூடிய அரசர்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவார்கள்.