பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு அடிகளார்



1197. “ஒருவரிடமே பல காலத்துக்கு ஒரே பணி இருப்பது நற்பழக்கத்தைத் தூண்டுவதில்லை.”

1198. “தெளிவாகக் கருத்துப் பரிமாற்றம் இல்லையானால் காரியக் கேடுவரும்.”

1199. “படித்தவர்களிடம் உள்ள தீயப் பண்புகள் அகன்றாலே-சமுதாயம் உருப்பட்டுவிடும்.”

1200. “மற்றவர்களின் பக்தி நம்முடைய பெட்டியைத் தீண்ட அனுமதிக்கக்கூடாது.”

1201. “மற்றவர் செவ்வி பார்த்து ஒழுகுதல் உயரியப் பண்பு.”

1202. “தேர்தலையே நோக்கமாகக் கொண்ட அரசியல், மக்களைப் பிச்சைக் காரராக்கிவிடும்.”

1203. “அரசு தர்மச்சாலையாக மாறிவிடக் கூடாது.”

1204. “எல்லாம் இருந்தும் காரியம் நடக்க வில்லை. ஏன்? இதுதான் மனிதரின் விபரீதமான போக்கு.”

1205. “பலநாள் பழகியவர்கள் பண்பில் தலைப் பிரியமாட்டார்கள்.”

1206. “இன்றைய ஆளுங்கட்சியினரின் அடித்தளத்தினர் நாடே தங்களுடையது என்ற முடிவுக்கு வந்து ஆட்டம் போடுகின்றனர். இந்தப் போக்கு எதிர் விளைவுகளை உருவாக்குவது இயற்கையின் நியதி! தவிர்க்க இயலாதது.”

1207. “தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர், முற்பட்டோர் பட்டியல் ஒரு நாட்டில் நிலையாக இருப்பின் அது நீதிக்கும் வளர்ச்சி என்ற நியதிக்கும் மாறுபட்ட சமுதாய அமைப்பாகும்.”