பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு அடிகளார்



1218. “மாக்கம், வியப்பு ஆகியவற்றிற்குரியன வாழ்க்கையை பூரணத்துவம் செய்யா.”

1219. “உரிமை உணர்வே நிலையான உறவுக்கு அடிப்படை.”

1220. “ஒருவர் வெறுக்கப்படுதலுக்குக் காரணம் அவர்தம் இயல்புகள் மட்டுமல்ல. மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளும் காரணம் ஆகும்.”

1221. “ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டால் யாருக்கும் இடர்ப்பாடு இல்லை.”

1222. “ஒரு சமூக மாற்றம் எளிதில் நிகழாது. தொடர்ச்சியான போராட்டம் தேவை.”

1223. “எந்த ஒரு தீமையும் தொடக்கத்தில் தயக்கத்துடன் தலைகாட்டுகிறது. பின் பழக்கத்தின் காரணமாகத் தீமையே இயல்பாகிவிடுகிறது.”

1224. “சாமார்த்தியமும் திறமையும் ஒன்றல்ல.”

1225. “சாமார்த்தியம் எப்படியும் காரியத்தை சாதிப்பது. திறமை, முறைப்படி சாதிப்பது,”

1226. “அப்பாவிகள் நல்லவர்களல்லர். தீமை செய்ய சக்தியற்றவர்கள்.”

1227. “நல்லவர்'-இது முழு நிறைச் சொல். ஆற்றலுடையவர்களே நல்லவர்களாக வாழ்தல் இயலும்.”

1228. “மானம் இல்லாதவர்கள் எந்த தவறுகளுக்கும் வருந்தமாட்டார்கள். திருந்தவும் மாட்டார்கள்.”

1229. “அடிக்கடி ஏற்படும் செலவுகளில் விழிப்பாக இருப்பது நிதி நிர்வாகத்திற்குத் தேவை."