பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


அளவுடைய இயற்கையினில் அழகிருந்தும்,கண்டோமா?
குலைகுலையாய்க் கொட்டிவைத்துத் தொடுக்காமல் தூங்குகின்ற
மலர்களைப்போல் இயற்கை எழில் மதிப்பற்றுக் கிடக்குதய்யா"

உமறுப்புலவர் ஓர் இயற்கைக் கவி. அமைவுடைய இயற்கையிலே, மனதை ஆழப் பறிகொடுத்து ஆர்வமுடன் அவற்றைப்பாக்களாக்கிச் சீறாப்புராணத்திற்குச்சிறப்பினைக் கொடுத்திருக்கிறார். தண்டியலங்காரம் என்னும் அணிநூல், காவியம் கொண்டிருக்க வேண்டியவைகளுள் இன்றியமையாத ஒன்றாகக் கூறுவது இயற்கை வருணனை. "மலை கடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இணையன புனைதலும்" பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல் கூறலும் காவிய ஆசிரியர் கடமை என்று அணி இலக்கணம் கூறியுள்ளதைத் தலைமேற் கொண்டு, இயற்கை வருணனைகளுக்குத் தலையாய இடம் தந்து, சீறாப்புராணக் காவியத்தை சிறப்புறச் செய்திரு க்கிறார் உமறுப் புலவர். கம்பர் காவியத்தைக் கற்றுத் தெளிந்தவரான உமறு கம்பரை அடியொற்றியே இயற்கையைத் தம் காவியத்தில் வருணித்திருப்பதை இங்கே குறிப்பிடுவது இன்றியமையாததாகும்,

கம்பரும் உமறுவும்

கம்பர், இராமாயணத்தை ஆற்றுபடலம், நாட்டுப்படலம், நகரப்படலம் என்று தொடங்குகின்றார் , சீறா பாடிய உமறுவும் ஆற்றுபடலத்தை நாட்டுபடலத்தில் உள்ளடக்கி நாட்டுப்படலம் நகரப்படலமெனத் தொடங்குகிறார். மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தோடும் நிகழ்ச்சியோடே இவ்விரு பெருங் காவியங்களும் தொடங்குகின்றன. வெண்ணிற வானம் கடல்நீரை முகந்து கருமேகங்களாய்த் திரும்புவதை இருபெருங் கவிஞர்களும் கண்டு, கண்டதை உவமையோடு அமைத்துப் பாடியிருக்கின்றனர்.