பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

393

குலாம் காதிறு உரை

சீறாவின் சில படலங்களுக்குக் குறிப்புரையும் விரிவுரையும் வந்துள்ளன. தனியாகப் படலத்திற்கு வந்துள்ள உரைகளுள் முதன் முதற் குறிப்பிட வேண்டியது நாகூர்க் கவிஞர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் நபியவதாரப் படலத்திற்கு எழுதிய உரையாகும். அவ்வுரை பார்வைக்குக் கிடைப்பது அரிதாயிருக்கின்றது.

உரை கடிலகம்

ஆனால் அவர்தம் உரையை மறுத்துப் பறங்கிப்பேட்டை காதிரசனா மரைக்காயர் எழுதிய ‘சீறா நபியவதாரப்படலம் உரை கடிலகம்’ என்னும் உரை சீறாவிற்கு வாய்த்த சிறந்த உரையாகும்.

இவ்வுரை எழுந்த சூழலே வியப்புக்குரியதாகும். தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைக் கற்றுத் துறைபோகிய காதிரசனா மரைக்காயரிடம் அவர்தம் நண்பர்கள் சீறாவிற்கு உரையெழுத வேண்டு மென்று தூண்டினராம். ஆனால் ‘அத்தகுதிக்குச் சற்றும் பாத்திரமல்லேன்’ என அவர் மறுத்து வந்தாராம், இந்நிலையில் குலாம் காதிறு நாவலர் எழுதிய நபியவதா உரை அவர் பார்வைக்குக் கிடைத்திருக்கிறது. அதில் 'அவ்வுரையாசிரியர் தமது கல்வியே கடலினும் பெரிதெனக் கொண்டு நூலாசிரியர் ஒருமை பன்மை தெரியாதார் எனக் குற்றங் கூறித் தமதறிவிற்கு இலக்காய்ச் செய்யுளைத் திருத்தித் தவறுரை வரைந்திருத்தலே பெரும்பான்மையும் புலப் பட்டனவாம். எனவே, உமறுப்புலவரவர்களின் நுண்ணிய கருத்தினையும் குலாம்காதிறு நாவலரினது கவனமின்மையையும் ஒருவாறு எடுத்துக்கூறி உலகப் பிரசித்தமாய்க் காட்டுதல் அத்தியாவசியம் எனக் கருதி, அவர் உரைக்குத் திலகமாய் “உரைகள் திலகம்” எனும் ‘உரைகடில’த்தைத் தம் முப்பதாம் வயதில் இயற்றியதாகக் காதிரசனா மரைக்காயர் குறிப்பிடுகிறார்.