பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

395

பிற உரைகள்

இவ்விரு உரைகள் தவிர பிற குறிப்புரைகளும் வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் குறிப்பிடவேண்டிய பதிப்பு திரு. எம். ஆர். அப்துற்-றஹீம் அவர்கள் பதிப்பித்த "சீறாப்புராணம்"--விலாதததுக் காண்டமாகும். சீறா முழுமையும் கிடைக்காத நாளில், இப்பதிப்பை அவர் வெளிக் கொணர்ந்தார். அதிலிருந்து ஒரு பகுதியே "சீறாப் புராணத்தில் சில பாடல்கள், என்ற தலைப்புடன் சிறு நூலாக வெளி வந்துள்ளது.

ஈழத்து உரை

ஈழத்து அன்பர்கள் சீறாவைக் கல்லூரியளவில் பாடமாக வைப்பதற்காகச் சில பாடல்களை உரையுடன் வெளியிட்டுள்ளனர். பதுறுப் படலம், அலிமா முலையூட்டுப் படலம் போன்றவை இவற்றுள் அடங்கும். பதுளையைச் சார்ந்த திரு எம். சி. எம். சுபைர். திரு. பி. எம். எம். அப்துல் காதர் இணைந்து உரையெழுதியுள்ள ‘பதுறுப் படல’ உரை குறிப்பிடத்தக்கது. இப்பதிப்பில் ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை, பொழிப்புரை விளக்கவுரை, அரும் பதவுரை ஆகிய நான்கு வகை உரைகளும் தரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இவ்வுரையாசிரியர்கள் நூல் முழுவதற்கும் உரையெழுதின் சிறப்பாக அமையும்.

உமறு தரும் சீறா

சீறாவை அனைவரும் மறந்திருந்த நிலையில் திரு. நூர் முகம்மது எழுதிய ‘உமறு தரும் சீறா’ என்னும் அறிமுக நூல் சீறாவை மக்களிடையே பரப்பிய அருமையான பதிப்பு. சீறாவில் சிறந்த பாடல்கள் உரிய கதைப்போக்குடன் சுருங்கிய வடிவில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 450 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.