பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"அன்பான பையா, உனக்கு அமெரிக்கா போக யாரும் இலவச விமான டிக்கட் தரமாட்டார்கள். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் நீ வைத்திருக்க வேண்டும். உன் குடும்பச் சொத்து முழுதுமே அவ்வளவுக்குத் தேராது. அப்புறம் ராக்கெட்டில் போக லட்சக் கணக்கில் செலவாகும்!"

அப்பு முற்றிலும் மனம் சோர்ந்து போனான். அவ்வளவு பணத்தை அவன் எவ்வாறு சேகரிக்க முடியும்?

"வேறொரு வழி இருக்கிறது, மகனே" என்றார் ஆசிரியர்.

அப்புவின் முகத்தில் ஒளிபிறந்தது.

"நீ நன்றாகப் படித்து சிறப்புடன் விளங்கினால், அரசு உன் பயணச் செலவை ஏற்கலாம். ஆனால் நீ மேற்கொண்டு படிக்கவும் பெரும் அளவு பணம் தேவை." ஆசிரியர் மேலும் சொன்னார், "மகனே, பணம் மதிப்புள்ளது. ஒவ்வொன்றுக்கும் உனக்கு பணம் தேவை."

அப்பு மெளனமாக இருந்தான். அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

ஆசிரியர் தொடர்ந்து கூறினார்: "பணம் சேமிக்கும்படி உன் அப்பாவிடம் சொல்லு. அவர் வீண்செலவு பண்ண வேண்டாம். உனது படிப்புக்காகவும், உன் எதிர்காலத்துக்காகவும் ஒவ்வொரு காசையும் அவர் மிச்சம் பிடிக்க வேண்டும். உன் அப்பா பணத்தை வீணடிக்கிறாரா, சொல்லு."

அப்பு தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை. அவன் தன்னிரக்கத்தால் வாடினான். தன் அழுக்குத் துணிகளை, கிழிந்த புத்தகங்களை, தனது பெருந்தீனியை அவன் எண்ணினான். அவன் கண்களில் நீர் பெருகியது.

ஆசிரியர் அவனைப் பெருமையோடு கட்டித் தழுவினார்.

முத்துத் தீவு என்ற சிறிய கிராமத்தில் அன்று ஒரு சிறு முத்து பிரகாசமாய் ஒளி வீசியது.

(தெலுங்கு கதை)

129