பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாய்க்குட்டி விஷயம் உண்மை இல்லை என்று தெரிந்ததும், எனக்கு உரியது கிடைத்தது. அபி என் முதுகில் சூடாக ஒரு அறை தந்தான். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. அவன் என் கோரிக்கைக்கு இணங்கினான்.

"நாம் போவோம். நாம் வெளியே போய் வெகு காலம் ஆகிறது. கடைசியாக நாம் சோனார்பூர் சதுப்புகளில் வேட்டையாடியதுதான். ஆனால் யார் இந்த ஆசாமி! நீ ஏன் அதிக விவரம் தரக்கூடாது?"

"அவர் என்னிடம் விவரம் எதுவும் சொல்லவில்லை. நான் உனக்கு எப்படி அதிகம் சொல்வேன்? ஏதோ மர்மம் இருப்பதும் நல்லது தானே. நம் கற்பனை வேலை செய்வதற்கு ஒரு வாய்ப்பு."

"அந்த ஆள் யார் என்றாவது சொல்லேன்."

"காந்தி சரண் சாட்டர்ஜி, இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? ஒரு சமயம் அவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தாவர இயல் பேராசிரியராக இருந்தார். பிறகு, அபூர்வ தாவர இனங்களைச் சேகரிக்க அலைவதற்காக அந்த வேலையை விட்டார். நிறைய ஆய்வு செய்தார். சில கட்டுரைகளை வெளியிட்டார். அற்புதமான தாவரங்கள் பல-முக்கியமாக ஆர்க்கிட்கள்-அவரிடம் இருந்தன."

"நீ அவரை எப்படிச் சந்தித்தாய்?"

"ஒரு சமயம் நாங்கள் அஸ்ஸாமில் காஜிரங்காவன பங்களாவில் சேர்ந்து இருந்தோம். ஒரு புலியைச் சுடுவதற்காக நான் அங்கே போனேன். அவர் நீபென்தஸ்சை தேடிக்கொண்டிருந்தார்."

"எதை".

"நீபென்தஸ். அது தாவர இயல் பெயர். உனக்கும் எனக்கும் கூஜாச் செடி. அஸ்ஸாம் காடுகளில் வளர்கிறது. பூச்சிகளைத் தின்று வாழ்கிறது. அதை நான் பார்த்ததில்லை. இது காந்தி பாபு சொன்னவிவரம்."

"பூச்சி தின்னும் செடியா செடி பூச்சிகளைத் தின்னுமா?"

"நீ தாவர இயல் படித்ததேயில்லை என்று தெரிகிறது."

"இல்லை. நான் படித்ததில்லை."

"சந்தேகம் வேண்டாம். பள்ளிப் பாடநூல்களில் இச் செடிகளின் படங்களைக் காணலாம்."

"சரி, மேலே சொல்."

"அதுக்கு மேல் சொல்வதற்கு அதிகம் இல்லை. நான் என் புலியை வென்றேன், திரும்பி விட்டேன். அவர் அங்கு தங்கினார். என்றாவது ஒரு நாள் அவரைப் பாம்பு கடிக்கும், அல்லது வனவிலங்கு தாக்கும் என்று நான் அஞ்சினேன். அப்புறம் நாங்கள் அதிகம் சந்திக்கவில்லை. கல்கத்தாவில் ஒரிரு தடவை சந்தித்தோம். ஆனால் அடிக்கடி அவரை நினைத்துக்

17