பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காந்தி பாபு ஒரு பெட்டி அருகே நின்றார். அதனுள் இரண்டு அங்குல நீளமுள்ள பச்சை இலைகளை உடைய விசித்திரச் செடி ஒன்று இருந்தது. அவ்விலைகளில் பல் வரிசைகள் போல் கூர்கூரான வெள்ளை விளிம்புகள் இருந்தன. கண்ணாடிப் பெட்டியில், புட்டியின் வாய் அளவுக்கு ஒரு வட்டக் கதவு இருந்தது. காந்தி பாபு வெகு வேகமாய் அதை திறந்தார். புட்டியின் மூடியை நீக்கி, அதன் வாயைக் கதவினுள் புகுத்தினார். உள்ளிருந்து ஒரு பூச்சி வெளிப்பட்டதும், அவர் புட்டியை விரைவாக இழுத்துக் கொண்டு, கதவை மூடினார். அந்தப் பூச்சி சற்றே அங்குமிங்கும் திரிந்தது. பிறகு ஒரு இலை மீது அமர்ந்தது. உடனே அந்த இலை நடுவில் மடங்கி, பூச்சியை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. பற்களின் முனைகள் ஒன்றுடன் ஒன்று சீராகப் பொருந்தின. பூச்சி அந்தக் கூண்டிலிருந்து தப்பி ஒட வழி இல்லை.

இத்தனை விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இயற்கை அமைத்த பொறி எதையும் இதுவரை நான் கண்டதேயில்லை.

கம்மிய குரலில் அபி கேட்டான் "பூச்சி எப்பவும் இலைமீதே உட்காரும் என்பது என்ன நிச்சயம்?"

"இச் செடிகள் பூச்சிகளை வசியம் செய்ய ஒரு மணம் பரப்புகின்றன. இச் செடிக்கு வீனஸ் ஈப்பொறி என்று பெயர். இது மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தது. தாவர இயல் பாட நூல்கள் அனைத்திலும் இது காணப்படும்" என்றார் காந்தி பாபு.

நான் பிரமிப்புடன் பூச்சியைக் கவனித்தேன். அது முதலில் பதறித் துடித்தது. பிறகு குழப்பமுற்றது. அதன் மேல் இலையின் இறுக்கம் அதிகரித்தது. அந்தச் செடி, உயிரைச் சூறையாடுவதில் ஒரு பல்லிக்குச் சிறிதும் சளைத்ததல்ல.

அபி சிரிப்பு வரவழைக்க முயன்றான். "வீட்டில் இது போல் ஒரு செடி இருப்பது நல்லது. பூச்சிகளை எளிதில் ஒழிக்கலாம். பாச்சைகளைக் கொல்ல டி.டி.டி. பொடி தெளிக்கத் தேவையில்லை."

"அதுக்கு இந்தச் செடி சரிப்படாது. பாச்சைகளை இது ஜீரணிக்க இயலாது. இதன் இலைகள் மிகச் சிறியன” என்று காந்தி பாபு சொன்னார்.

அடுத்த பெட்டியில் இருந்த செடியின் இலைகள் லில்லி இலைகள் போல் நீளமானவை. ஒவ்வொரு இலையின் துனியிலும் பை போன்ற ஒன்று தொங்கியது. இதையும் நான் முன்பே படங்களில் பார்த்திருக்கிறேன்.

"இது தான் நீபென்தஸ்-கூஜாச் செடி" என்று காந்தி பாபு விளக்கினார். இதன் பசி வெகு அதிகம். முதன்முதலில் இதை நான்

21