பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஊழலில் ஈடுபட்ட அமைச்சன் ஒருவன் தந்திரவாணன் வீட்டைத் தேடிச் சென்று, “அரசருடன் பேசும் பொழுது, என்னைப் பார்த்து சிரித்தீர்களே, என் ஊழல் தெரிந்து விட்டதா” என தயங்கியபடியே கேட்டான். “அரசர் மிக கோபமாக இருக்கிறார், உமக்காக நான் பரிந்து பேசிப்பார்க்கிறேன். எதற்கும் கவலை வேண்டாம்” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் தந்திரவாணன். அமைச்சன், உடனே மூவாயிரம் பவுனை அவனிடம் கொடுத்து, ‘எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று அவனை வணங்கி, வேண்டிக் கொண்டு சென்றான். இப்படியாக, தினமும் அரசனிடம் சென்று, அரச சபையில் இருந்த ஒவ்வொருவரையும் பார்த்துச் சிரித்து, அரசனிடமும் ஏதாவது பேசிவிட்டுச் சென்றான் தந்திரவாணன். பிறகு, அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும், தனித்தனியாக தந்திரவாணனைத் தேடிச் சென்று, நிறைய பவுன்களைக் கொடுத்து, தங்களைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டனர். பல நாட்கள் கழிந்தன. அரண்மனையிலிருந்து பெரும் பாலானவர்கள் தந்திரவாணனிடம் வந்து நிறையப் பவுன்களைக் கொடுத்து, வேண்டிக் கொண்டனர். தந்திரவாணன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே, பொருள் சேர்ந்துவிட்டது. ஆகையால், தான் செய்த தந்திரம் ஒரு சமயம் அரசனுக்குத் தெரிந்து விட்டால், தனக்கு ஆபத்தாகி விடுமே என்று யோசித்து முன்எச்சரிக்கையாக நடக்க எண்ணினான். அரசனை தனிமையில் சந்தித்து, தான் செய்த தந்திரத்தை விவரமாகச் கூறி, கிடைத்தவற்றில் பாதியை அரசனிடம் சேர்ப்பித்து, தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். தந்திரவாணன்.