பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசிரியர் உரை

குறிப்புகளும், அவைகளில் நடைபெற்ற வழிபாட்டு முறைகள், ஆடல்பாடல்கள், கூத்துக்கள், பொங்கலிடுதல், புகை காட்டுதல், பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க, எனப்பாடி, ஆடிய குறிப்புகள் பலவும் காப்பியத்தில் காண்கிறோம்.

இளங்கோவடிகளாரின் காப்பியத்தில் வேட்டுவ வரி, ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை ஆகிய பாடல்கள் தனியான இலக்கியச் சிறப்பு கொண்டவை. இப்பாடல்களில் முறையே கொற்றவை வழிபாடு, திருமால் வழிபாடு, முருகன் வழிபாடு ஆகியவை பற்றிய பல விவரங்களும் காண்கிறோம்.

இளங்கோவடிகள் சமணக் கொள்கைகளில் உறுதியானவர் என்பது அவருடைய காப்பியத்திலிருந்து தெளிவாகப் புலப்படுகிறது. அறப்பள்ளிகள், சாரணர், சமணத் துறவிகள் ஆகியோருக்கு மிகவும் கௌரவமான இடம் காப்பியத்தில் இருப்பதைக் காணலாம். ஊழ்வினையைப் பற்றிய சமணக் கொள்கையை இளங்கோவடிகள் உறுதியாக எடுத்துக் காட்டுகிறார். மக்களுடைய வழிபாடுகளிலும் சமயப் பழக்க வழக்கங்களிலும் உள்ள மூடங்களை இலைமறைவு காயாக இலக்கிய மரபுடன் சுட்டிக் காட்டுகிறார். தெய்வம் தெளிமின் என்றும் தனது காவியச் செய்தியை வெளிப்படுத்துகிறார்.

இருப்பினும் இளங்கோவடிகளார் தனது காப்பியத்தில் வேத சமயக்கருத்தக்களையும் மக்களின் மரபு வழியிலான வழிபாடுகளையும் மிகவும் சிறப்பாகவே எடுத்துக் கூறுகிறார். இவ்வாறாக சிலப்பதிகாரம் கூறும் வைதீக சமயக் கருத்தக்கள் பற்றியும் மக்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பற்றியும் இந்நூலில், தமிழ்த் தொண்டாகக் கருதி தொகுத்தும் விரித்தும் கூற முயற்சிக்கப்பட்டிருக்கிறது.


★★★