பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 283

காட்சியாக இருந்தது; பேரிரைச்சல் கேட்பதற்கு இனிதாக விளங்கியது.

உழவர்கள் இல்லங்கள் அங்கங்கே அவர்கள் எழுப்பிய ஆரவார ஒலிகள் கேட்பதற்கு இனிமை தந்தது. சேற்றில் புரண்டு எழுந்த எருமை தன் தினவைப் போக்கிக் கொள்ள நெற் கூடுகளில் வந்து உராய அக் கூடுகளில் கொட்டி வைத்த தானிய வகைகள் நெற்கதிர்களில் சிந்த அந்தக் காட்சியைக் கண்டு கைவினைத் தொழிலரும், உழவர் பெருமக்களும் உவகை கொண்டு ஆரவாரித்தனர். அது இன்ப ஒலியாக இசைத்தது.

உழத்தியர்கள் வயல்களத்தில் புகுந்து களை பறித்தனர்; நாற்று நட்டனர், சேறுபடிந்த கோலம் அவர்களை வேறுபடுத்திக் காட்டியது. உழைத்த களைப்புத் தீரத் தழைத்த கள்ளைப் பருகிக் களி மகிழ்வு கொண்டு புதுப் புதுப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். அம்மகிழ்வுப் பாடல்கள் கேட்போரை மயங்க வைத்தன. இந்தப் புதுமை கண்டு அவர்கள் புதுமகிழ்வு கண்டனர்.

உழுகின்ற கலப்பைக்குப் பூக்கள் சூட்டி வழிபட்டுப் பின் அதனைக் கொண்டு நிலத்தை உழுதனர்; அவர்கள் எக்களிப்புக் கொண்டு பாடிய பாடல் ஏர் மங்கலம்' எனப்பட்டது. அரிந்து குவித்துக் கடாவினைவிட்டு அதரி திரித்து நெல்லை முறம் கொண்டு தூற்றியபோது பாடிய பாட்டு 'முகவைப் பாட்டு' எனப்பட்டது. கிணைப் பொருநர் முழவு கொண்டு எழுப்பியது 'கிணை இசை' எனப்பட்டது. இம் மூவகைப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வழிநடை வருத்தம் தெரியாமல் நடந்து சென்றனர்.

வழியில் பல ஊர்களைக் கடந்து சென்றனர். மறையவர்கள் வேள்விகள் எழுப்பிய புகை, உழவர்கள் கரும்பு ஆலைகளில் மூட்டிய தீயில் தோன்றிய புகை வானத்தை மூடின; அவை மலை தவழும் மேகம் எனக் கவிழ்ந்திருந்தன; இத்தகைய அந்தணர்கள் இருக்கைகளும், உழவர்கள் இல்லங்களும் உடைய ஊர்கள் பலவற்றைக் கடந்து சென்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு காவதமே அவர்களால் கடக்க முடிந்தது. அங்கங்கே இருள் கவ்வும் நேரங்களில் சோலைகளில் தங்கி ஒய்வு பெற்றனர்: களைப்பு ஆறினர்.