பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 புறஞ்சேரி இறுத்த காதை தான் தவறுசெய்தவன் என்று உணர்ந்தான். 'இம்முடங்கலின் கருத்துகள் என் பெற்றோர்க்கும் பொருந்துகின்றன; இதனை அவர்பால் சேர்க்க' என்று அவனிடம் தந்து தன் பெற்றோர்க்குத் தன் செய்தியையும் வணக்கத்தையும் கூறி 'அவர்தம் துன்பத்தைக் களைக” என்று கூறி அனுப்பினான். அதன்பின் அறவியாகிய கவுந்தியடிகளை அடைந்தான்.

பாணர்களுடன் உரையாடல்

அங்கே பாணர்கள் சிலர் வந்திருந்தனர்; அவர்கள் கொற்றவையைப் போற்றிப் பண்ணுடன் யாழ்இசை மீட்டினர். அவர்களோடு சேர்ந்து கலந்து அப்பாடலை ஆசான் நிலையில் இருந்து அமைதியாகக் கேட்டு அவர்களோடு கலந்து பாடிப் பின் உரையாடினான். பின்பு, 'மதுரை இன்னும் எத்தனை காவத துாரத்தில் உள்ளது?’ என்று கோவலன் வினவினான்.

அவர்கள் மதுரைத் தென்றல் அங்குவந்து மதுரமாக வீசுவதைக் காட்டினர். 'அது சந்தனம், குங்குமம், கஸ்துாரி முதலிய கலவைகளின் சேறுகளில் படிந்தும், சண்பக மாலை, மாதவி, மல்லிகை, முல்லை முதலிய பூக்களில் பொருந்தியும், சமையல் அறைப் புகை, அங்காடிகளில் அப்பம் சுடும்புகை, மைந்தரும் மாதரும் மாடங்களில் எழுப்பும் வாசனைப் புகை, வேள்விச் சாலையில் விரும்பி எழுப்பும் புகை, அரசன் கோயிலில் விரவிவரும் நறுமணம் இவை பலவும் கலந்து வருவது இம்மதுரைத் தென்றல்; இது புலவர் புகழும் பொதிகைத் தென்றல் போன்றது அன்று. அது குளிர்ச்சி தருவது: இது மணமும் புகையும் கலந்து மகிழ்ச்சி தருவது; மாபெரும் நகர் என்பதைக் காட்டுவது ஆகும். அதனால் இரண்டிற்கும் வேறுபாடு அறிய இயலும்; எனவே மதுரை மிகவும் அணித்து உள்ளது' என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். 'அந்த அழகிய ஊருக்குத் தனித்துச் சென்றாலும் அச்சம் இல்லை; தடுப்பவர் யாரும் இல்லை; மடுத்துச் செல்லலாம்' என்று கூறக் கோவலன் மற்றைய இருவரோடு முன்போலவே இரவில் பயணம் செய்து விடியற் காலையில் மதுரையை அடைந்தான்.

மதுரையை அடைதல்

அங்கே அவர்கள் முதலில் கேட்டது சிவன் கோயிலின் முரசு; அதனோடு சேர்ந்து அவர்கள் கேட்டது அரசன்