பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 333

அவனைக் கண்டது; தன் அவலம் துடைக்க அவன் தன்னைத் தொட்டது; இருக்க என்று அவன் இயம்பியது இவை எல்லாம் அவளுக்கு மாயச்செய்கைகளாக இருந்தன. 'திடீர் என்று தோன்றி மறைந்துவிட்டான். மாயம் அல்ல என்றால் அதன் தன்மை யாது? தெய்வம்தான் வந்து என்னை மருட்டியதோ? அவனை எங்குச் சென்று அடைவது? இருக்க என்றான்; பொறுக்க என்னால் இயலாது; என் சினம் தணிந்தால் அன்றி அவனைப் போய்ச் சேரேன்'

"தீமை செய்த அரசனைத் திறம்கேட்பேன்; வழக்கு ஆடுவேன்; அவனை வழிக்குக் கொணர்வேன்; அழிப்பேன்; இந்நகரை ஒழிப்பேன்' என்று கூறி உறுதி கொண்டவளாய் அகன்றாள்.

எழுந்தவள் பழைய கனவினை நினைத்துப் பார்க்கிறாள். தீய கனவு அது இன்று பலித்து விட்டது; நின்றாள்; நிலை குலைந்தாள், நெடுங்கண்நீர் சோரச் சற்று அயர்ந்தாள்; எண்ணிப்பார்த்தாள்; கண்களில் பெருகிய நீரைத் துடைத்துக் கொண்டாள்; அவலத்தை அகற்றினாள். ஆவேசம் கொண்டவளாய் அரசன் கோயிலை அடைந்தாள்; அவன் வாயில் முன் சினத்துடன் நின்றாள்.

20. வழக்கு உரைத்தல்

(வழக்குரை காதை)

கோப்பெருந்தேவி கனவு

கோப்பெருந்தேவி தீக்கனா ஒன்று கண்டாள்; அதை அவள் தன் தோழிக்கு எடுத்து உரைத்தாள்: 'அரசனின் செங்கோல் அதனோடு அவன் வெண்கொற்றக்குடை இவை சாய்கின்றன; வாயில் கடையில் வைக்கப்பட்டிருந்த மணி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது; திசைகள் எட்டும் அசைவுகள் ஏற்பட்டு அதிர்கின்றன; சூரியனை இருள் விழுங்குகிறது; வானவில் இரவில் தோன்றுகிறது: பகலில் நட்சத்திரங்கள் கொள்ளிக்கட்டைகள் போல நெருப்பை அள்ளி வீசுகின்றன'.