பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 343

பொய்க்கையாக வைத்துக் கொண்டான். ஒரு காலத்தில் இந்திரன் மீது படைஎடுத்து அவன் முடியைக் களைந்த மாமன்னன் அவன் வெற்றி தேடிய அந்தக் கை இப்பொழுது வெறுமை நிலை உற்றது. தவறு செய்தால் பாண்டியர்கள் தம்மைத் திருத்திக் கொள்வார்கள்; இது மரபு வழி நிகழ்ச்சி'

பாண்டியன் நெடுஞ்செழியன்

'அத்தகைய மரபில் வந்தவன் பாண்டியன் நெடுஞ் செழியன்; அவனும் ஒரு முறை அவசரப்பட்டுத் தவறான தீர்ப்பை வழங்கிவிட்டான். அது தவறு என்று தெரிந்ததும் தன்னைத் திருத்திக் கொண்டான்; தவறு செய்தது அவன் எதிர்பாராதது; உடனே அதை உணர்ந்து திருத்திக் கொன்டான்.”

'அதன் வரலாறு இது : புகார் நகரத்தில் பராசரன் என்னும் கற்ற அந்தணன் சேர நாட்டுக்குச் சென்று சேர அரசனைப் பாடிப் பரிசல்கள் பெற்று வந்தான்; வழியில் பாண்டி நாட்டில் மறையவர் வாழும் ஊர் தங்கால் என்பது; அவ்வூரில் அரச மரத்தை உடைய மன்றத்தில் தங்கினான். அங்கே அவன் தன் பொதிகளை எடுத்துவைத்து விட்டுச் சற்று இளைப்பாறினான்.'

'அவ்வூர்ச் சிறுவர்கள் அவனை வந்து சூழ்ந்து கொண்டனர். அச்சிறுவர்களை நோக்கித் தன்னோடு சேர்ந்து வேதம் ஒதினால் அவர்களுக்குப் பரிசு தருவதாகக் கூறினான். அவர்களுள் வார்த்திகன் என்பான் மகன் தக்கிணன் என்பான் மிகத் தெளிவாக அம் மந்திரங்களை உச்சரித்துக் கூறினான். அவனைப் பாராட்டிப் பொன் நாண் ஒன்றினையும், அணி கலன்கள் சிலவும், கைவளையும், தோடும், இவற்றோடு பண்டப் பொதிகை ஒன்றும் அளித்துப் பாராட்டித் தன் ஊர் திரும்பினான்.'

'இக் குடும்பத்து மாந்தர் வளமுடன் அணிகள் பூண்டு நடமாடுவதைக் கண்ட அரசின் காவலர் இவன் எங்கிருந்தோ களவாடிவிட்டான் என்று வார்த்திகனைச் சிறையிட்டனர். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பாள் அவ்வூர்க் கொற்றவை கோயில் முன் நின்று முறையிட்டாள்; அக் கோயில் கதவு மூடிக் கொண்டது. இதனை வேந்தன் கேட்டுத் தன் ஆட்சியில் எங்கோ கேடு நிகழ்ந்து விட்டது என்று யூகித்து அறிந்து விசாரித்தான்: