பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 கட்டுரை காதை

"முற்பிறப்பில் செய்த தீ வினைகள் வந்து உருத்தும் போது தவறு செய்தவர்கள் தப்ப முடியாது; அனுபவித்துத்தான் தீர வேண்டும். இதைப்போல் நீயும் நாள்கள் பதினான்கு கடந்தபின் கோவலனை வானோர் வடிவில் காண முடியும். மனித வடிவில் காண முடியாது' என்று மதுரை மாதெய்வம் மாபெரும் பத்தினியின் பழம்பிறப்புச் செய்திகளை எடுத்துக் கூறி அவளைத் தணிவித்தது. மதுரை நகர் எரியினின்று தப்பியது.

இறுதி அவலம்

கருத்துறக் கணவனைக் கண்டால் அல்லது நிற்பது இல்லை என்று கொற்றவை கோயில் வாயில் முன் தன் கைவளையல்களை உடைத்து எறிந்தாள். 'கிழக்கில் கணவனோடு இந்நகருக்கு வந்தேன், மேற்குவழியாகத் தனியே வெளியேறுகின்றேன்' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மதுரை விட்டு வெளியேறினாள். இரண்டு நிலைகளை ஒருங்குவைத்து ஒப்பிட்டு அவல நிலையை எடுத்துக் கூறினாள்.

அதன் பின் அவள் எங்கும் தாழ்த்தவில்லை. இரவும் பகலும் தொடர்ந்து நடந்தாள். பள்ளம் மேடு இதனை அவள் கருதவில்லை. அசுரரை அழித்த அறுமுகவேள் குடிகொண்டிருந்த திருச்செங்கோடு எனப்படும் நெடுவேள் குன்றத்தை அடைந்தாள். பூக்கள் மிக்க வேங்கை மர நிழலில் நாள்கள் பதினான்கு சென்றபின் கணவனைக் கூடினாள். வானவர் வந்து வழிக்கொண்டனர்; மலர்மாரி பொழிந்து அவளை வாழ்த்தினர். கோவலன் தன்னோடு வான ஊர்தி ஏறி உயர் வாழ்வினை அடைந்தாள்.

'அவள் கணவனைத் தொழுதாள்; தெய்வத்தைத் தொழாதாள். அத்தகைய கற்பினை உடைய பொற்பினாளைத் தெய்வம் வழிபடுகிறது" என்பதை இவள் வாழ்வு எடுத்துக் காடடியது.