பக்கம்:சிலம்பின் கதை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

சிலம்பின் கதை



அறவுரைகள்

இந்தக் கதையைக் கேட்டவர்கள் அறவழியில் வாழ்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்று இளங் கோவடிகள் காப்பியத்தை முடிக்கிறார். அந்த நீதிகள் பின் வருமாறு :

“இடுக்கண் வருங்கால் நடுக்கம் அடையாதீர்;
தெய்வத்தைப் போற்றுவிர்; ஞானிகளை மதிப்பீர்;
பொய்பேசுவதைத் தவிர்ப்பீர்; புறம் கூறுதல் ஒழிப்பீர்;
ஊன் உணவு ஒழிப்பீர்; உயிர்க் கொலை செய்யற்க;
தானம்பல செய்க; தவம்பல ஏற்க;
செய்ந் நன்றி மறவாதீர்; தீயார் நட்பு இகழ்க;
பொய்ச்சான்று கூறாதீர்; மெய்ம்மை விட்டு அகலாதீர்;
அறவோரை அணுகுக; பிறவோரை விலக்குக;
பிறன் மனைவியை நயக்காதீர்; உயிர்களுக்கு ஊறு செய்யாதீர்;
இல்லற வாழ்வு இனியது; ஒழுக்கம் ஒம்புக;
கள், காமம், பொய், பயனற்ற சொற்கள்
இவை தீமை பயக்கும்; இவற்றை நீக்கி வாழ்க;
இளமையும், யாக்கையும், செல்வமும் நில்லா;
உள்ள நாட்களில் உறுதிகளைத் தேடுக;
இதுவே வீட்டு நெறி; பயனுள்ள வாழ்க்கை”

“இந்த அறநெறிகளைப் போற்றிக் காத்து உயர்வு அடைவீராக” என்று வாழ்த்துக் கூறி இளங்கோவடிகள் காவியத்தை முடிக்கின்றார். “இக்காவியம் தரும் உயர் அறங்கள் இவை எனக் கொள்க! நலம் பெறுக” என்ற வாழ்த்தோடு இக்காவியம் முடிவு பெறுகிறது.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/185&oldid=936506" இலிருந்து மீள்விக்கப்பட்டது