பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44 சீர்திருத்தச் செம்மல்

கருதார்; செல்வத்தால் உயர்வு தாழ்வு கருதார். கல்வி அறிவால் மேம்பட்டவன், தாழ்ந்தவன் என்றும் பாரார். யாவரேயாகினும் சரிநிகர் சமமாகக் கருதி, அனைவரும் கேளிர் எனக் கருதும் மனப்பாங்கு பெற்றிருந்தார்.

வ.வே.சு. ஐயரும் கேளிர், வடக்குப் பக்கமிகுந்த ஆதி திராவிடரும் கேளிர். செட்டி நாட்டரசரும் கேளிர்; பெட்டிக் கடையாரும் கேளிர். சர். ஆர்.கே. சண்முகனாரும் கேளிர்; சாதாரண சண்முகம் கேளிர். அப்துல்லாவும் கேளிர்; ஆனந்தராசும் கேளிர்.

இவ்வாறு அனைவரையும் கேளிராகக் கருதியமையால் அவர்கள் வாழ்க்கையையும் தம் வாழ்க்கையோடு இணைத்து, அனைத்திலும் பங்கு கொண்டு வாழ்ந்தார். தீபாவளி முதல் நாள் மாலையில் 'அரிசனங்களை' வீட்டுக்கு வரச்செய்து ஆளுக்கு ஒரு வேட்டியும், துண்டும் கொடுத்து வந்தார்.

நீலாவதி திருமணம்

அக்காலத்தில், திருச்சியைச் சேர்ந்த எஸ்.ஏ.கே. கலிய பெருமாள் என்பவரின் மகள் செல்வி நீலாவதி என்பவர் 'திராவிடன்' 'குடியரசு', 'குமரன்', 'ஊழியன்' போன்ற இதழ்களில் சீர்திருத்தக் கட்டுரைகள் எழுதி வந்தார்.

இக்கட்டுரை வாயிலாக நீலாவதியின் அறிவாற்றலை, முற்போக்குக் கருத்துக்களை, பண்பாட்டை உணர்ந்து கொண்ட சொ. முருகப் பனார், இப்பெண்ணைச் செட்டி நாட்டுத் தனவணிக இளைஞர் ஒருவருக்கு மணஞ் செய்து வைக்க வேண்டுமென்று