பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

88 சீர்திருத்தச் செம்மல்

பாரதி சந்திப்பு

தேசியகவி சி.சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், இந்நூலாசிரியர் முடியரசன் மூவரிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை முதலிய கவிஞர்களுக்கும் உதவிகள் செய்துள்ளார்.

பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுதே சண்முகனாருக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. அதன் பின்னர் பாரதியார் கடையத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்ட சண்முகனார் கடையத் திற்குச் சென்றார்

அங்கே தேடியலைந்து, வீட்டைக் கண்டுபிடித்து, அவ் வீட்டின் முன்னர் நின்று, 'பாரதியார் இருக்கிறாரா?' என்று குரல் கொடுத்தார் சண்முகனார்.

உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். செந்நிற மேனியும் முழுதும் மழிக்கப்பட்ட வழுவழுப்பான தலையும் கருத்த தாடிமீசையும் உடையவராக ஒரு முகமதியர் போல அவர் வந்து நின்றார்.

வீடு தவறி வந்து விட்டோமோ என எண்ணிய சண்முகனார், அவரைக் கூர்ந்து நோக்கி, ஒளியுமிழும் விழிகளைக் கண்டு, இவர் பாரதியார்தான் என்று வணக்கம் தெரிவித்தார்.

உள்ளேயிருந்து வந்தவர் சண்முகனாரை நோக்கிக் 'கானாடு காத்தானிலிருந்து வருகிறீர்களா?' என்று வினவினார்.