பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170சீவக சிந்தாமணிசமுதாயம். பகைகொண்டு உன் தந்தை அழிந்ததைப் போல் எங்களையும் அழியச் சொல்கிறாயா? நாம் அவனை எதிர்க்க முடியுமா! அவன் பெருநிலம் ஆளும் வேந்தன்; யான் சிற்றரசர்களில் ஒருவன்; எதிரியின் வலிமை நம் வலிமை இவற்றைச் சீர்தூக்கித்தான் செயல் பட வேண்டும். இன்று இந்த நிலையில் அவனோடு நல்லுறவு கொள்வது தான் நயக்கத் தக்கது” என்று கூறினான்.

சீவகன் ஆத்திரப்படவில்லை; கருத்து வேறு பாட்டுக்கு மதிப்புத் தந்தான். பொறுத்திருந்து பார்ப்பது தக்கது என்று அடங்கினான்; அன்னை விசயமாதேவியின் அறிவுரைக்குக் காத்திருந்தான்.

அரச அவை நீங்கி அரண்மனை வந்து சேர்ந்தான். அவன் தாயை விட அவன் வருகைக்கு, ‘அவன் எதிர்காலம்’ காத்திருந்தது. தன் அண்ணனின் முடிசூட்டு விழா நடந்ததும், தனக்கு மாலை சூட்டும் விழா நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மாமன் மகள் இலக்கணை.

அவளைப் பார்த்ததும் அவனுக்குப் புது ஆசை கிளம்பியது. அது அவனுக்கு உரிய தனி இயல்பு; அழகி என்றால் அவன் ஆராதனை செய்து பழகியவன்; விழாவிற்கு அவளும் வந்திருந்தாள்; அவள் கோலம் மணப் பெண்ணை நினைவூட்டியது.

“என்னப்பா பார்க்கிறாய்!” என்றாள் விசயை.

“மாமன் மகள்; அதனால்தான்” என்றான்.

“என்ன பார்க்கிறாய்?” என்று மறுபடியும் கேட்டாள்.

“நெடுமரமாக வளர்ந்திருக்கிறாளே அதனால்தான் பார்க்கிறேன்” என்றான்.

“என்னைப் பனைமரம் என்கிறார். அத்தான்” என்று குழைந்தாள் கோவிந்தன் மகள் இலக்கணை.