பக்கம்:சுயம்வரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பக்தர்கள்தான் பகவான்மீது பழியைப்
போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுமா?...

17


காலை சினிமாவுக்குத் தான் மட்டும் போகாமல் தன் மகளையும் அழைத்துக்கொண்டு போயிருக்கும் தன்னுடைய ‘எதிர்கால மருமக’னை ஆவலோடு எதிர்பார்த்தவாறு வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்துகொண்டிருந்தாள் ‘லட்டு மாமி’.

வந்தவர்கள் மாதவனும் நீலாவும் அல்ல; மகனிடம் கோபித்துக்கொண்டு ஊருக்குப் போயிருந்த அவன் தகப்பனார் சம்பந்தமும், தாயார் சாரதாம்பாளும்தான்!

அவர்களைக் கண்டதும், “என்ன இப்படித் திடீரென்று வந்து நிற்கிறீர்கள்! நாங்களல்லவா உங்களைத் தேடிக்கொண்டு ஊருக்கு வருவதாக இருந்தோம்?” என்றாள் மாமி.

“தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! நீங்கள் எப்போது இங்கே வந்தீர்கள் என்று விசாரிக்கக்கூட இப்போது எங்களுக்கு நேரமில்லை. எங்கே பையன், எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறான்?” என்று அவளைப் பரபரப்போடு விசாரித்தாள் சாரதாம்பாள்.

“எந்தப் பையன்? ஏன் ஆஸ்பத்திரிக்குப் போனான்?” என்று அவள் ஒன்றும் புரியாமல் அவர்களைத் திருப்பிக் கேட்டாள்.

“உங்களுக்குத் தெரியாதா? மாதவன் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் கிடக்கிறானாமே எங்களுக்குத் தந்தியடித்த புண்ணியவான் அவன் இருக்கும் ஆஸ்பத்திரியின் பெயரைத் தெரிவிக்க மறந்துவிட்டிருக்கிறான்; அதனால்தான் நாங்கள் நேரே வீட்டுக்கு வந்தோம்” என்றார் சம்பந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/131&oldid=1385175" இலிருந்து மீள்விக்கப்பட்டது