பக்கம்:சுயம்வரம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

135


மாதவனின் பிடியால் கசங்கிப் போன சட்டையை அவசர அவசரமாகச் சரி செய்தன. அதற்குப் பின், 'விடக்கூடாது; இனி அந்த மதனாவை விடவே கூடாது!' என்று கருவிக்கொண்டே அவன் திரும்பி நடந்தான்.

ஆனால் அவனை வெகு தூரம் நடக்க விடவில்லை அருணா; எங்கிருந்தோ ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு வந்திருந்த அவள், அவனுக்கு அருகே அதை 'டக்'கென்று நிறுத்தி, "ஏறிக்கொள்ளுங்கள்!" என்றாள்.

"எதற்கு?" என்றான் அவன், ஒன்றும் புரியாமல்.

அவள் சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்றான் அவன்.

"ஒன்றுமில்லை; ஏறிக்கொள்ளுங்கள்!" என்றாள் அவள் மீண்டும்.

அவன் ஏறவில்லை ; "எதற்கு, அதைத்தான் சொல்லேன்" என்றான் மீண்டும்.

"பாவம், என்னால்தானே அந்த மாதவன் உங்களை அப்படி உதைத்தான்?" என்றாள் அவள்.

அவன் திடுக்கிட்டு, "அதை நீ பார்த்தாயா?" என்றான் உடலும் உள்ளமும் ஒருங்கே கூச.

"ஆமாம், பார்த்தேன். பின்தான் அந்த உதைக்குப் பின் உங்களால் நடக்க முடியுமோ, முடியாதோ என்று இந்த டாக்சியைப் பிடித்துக்கொண்டு வந்தேன்!" என்றாள் அவள்.

இதைக் கேட்டதும் அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "என்மேல் உனக்கு இவ்வளவு அனுதாபம் இருக்குமென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!" என்றான் சற்றே இளித்தபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/138&oldid=1384860" இலிருந்து மீள்விக்கப்பட்டது