பக்கம்:சுயம்வரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

75

"சொல்லு, உதாரணம் இல்லாமல்தான் உன்னால் எதையும் சொல்ல முடியாதே!"

"நான் குழந்தையாயிருந்தபோது ஒரு நாள் அடுத்த வீட்டுக் குழந்தையைக் கிள்ளிவிட்டு, அது அழுவதற்கு முன்னால் நான் அழுதேனாம்!"

"அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்றால், அந்த புத்திசாலித்தனம் எனக்கு வேண்டவே வேண்டாம், சுவாமி" என்று கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.

"போடா, மடையா! கலியாணம் யார் செய்து கொள்கிறார்கள், தெரியுமா? முட்டாள்கள்தான் செய்து கொள்கிறார்கள்!" என்றான் அவன்.

"இதுவும் உன் சொந்தக் கருத்து அல்ல, இரவல்; அப்புறம்?"

“இந்த உலகத்தில் யாருக்கு எதுதான்டா, இரவல் இல்லை? எல்லாம் இரவல்தான்! 'ஆடை நமக்கிரவல், அணிந்ததெல்லாம் இரவல்' என்று ராத்திரியானால் பாடிக் கொண்டு வருகிறானே ஆண்டிப் பண்டாரம், அதுகூடவா உன் காதில் விழவில்லை?"

"அவனும் அதையெல்லாம் அணிந்து கொண்டு தானேடா பாடி வருகிறான்?"

"அதிலிருந்து என்ன தெரிகிறது? இரவலாயிருந்தாலும் அதை எடுத்து அணிந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்று தெரியவில்லையா? அதே மாதிரிதான் கருத்தும்; இரவலாயிருந்தாலும் வேண்டும் போது அதை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே?"

"சரி, சொல்லு! நான் கலியாணம் செய்து கொண்ட முட்டாள்; நீ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/78&oldid=1384739" இலிருந்து மீள்விக்கப்பட்டது