பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

29


ரத்னா, சர்பத்தைக் கலக்கி ஐஸ் துண்டு போட்டு வைக்கிறாள். “எனக்கு ரோஸ்மில்க் ஆன்டி!” என்று பரத் அவளை ஒட்டிக் கொள்கிறான்.

கிரிஜா எல்லோருடனும் உட்கார்ந்து மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறாள். முன் அறையில் அமர்ந்து தொலைக் காட்சியில் வரும் தொடர் நிகழ்ச்சியைப் பெண்களின் கூச்சலான விமரிசனங்களுடன் ரசிக்கிறாள். நத்தைக் கூட்டை உடைத்துக் கொண்டு அவள் அவளாக இருக்க முயன்றாலும் ஏதோ ஒர் இடி-மழைக்கு வானம் கறுத்து எங்கோ முணுக் முணுக்கென்று மின்னல் ஒளி வயிர ஊசி பளிச்சிடுவது போல் உணர்வில் ஒர் அச்சம் தோன்றிக் கொண்டிருக்கிறது.


4

இன்றும் மாயா குழந்தைக்கு உடல் நலமில்லை என்று துணி துவைத்து உலர்த்தாமல் போய் விட்டாள். கிரிஜா முற்றத்துத் துணிகளை எடுத்து மடித்து வைக்கையில் ரோஜா மாமி வந்திருக்கும் குரல் கேட்கிறது.

“கேட்கவே சங்கடமாயிருக்கே! நீங்க என்ன, பஞ்சபட்சம் பரமான்னமா கேட்கறேள்? ஏதோ இத்தனை உப்புப் பண்டம், சுத்தபத்தமா இருக்கணும்னு பழகியிருக்கேள். அதுக்காக பட்டினி கிடக்கும்படி விடுவாளா? மாமி, உங்ககளுக்குச் செஞ்சு நான் குறைஞ்சு போயிடமாட்டேன். நீங்க தாயாரைப் போல. சாயங்காலம், நான் ஒரு நடை வந்து, ஏதோ பத்தில்லாத பலகாரமா, பூரியோ, கேசரியோ, அவல் கஞ்சியோ கொண்டு குடுத்திட்டுப் போவனே...?”

கிரிஜாவுக்குத் திக்கென்று நெஞ்சில் இடிக்கிறது. ரத்னா யுனிவர்சிடிக்குப் போய்விட்டாள். குழந்தைகளும் இல்லை. இப்படி ஒரு திருப்பமா முந்தையநாள் நிகழ்ச்சிக்கு?