பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

73

வறுமை, குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லும் சிவப்பு முக்கோண அழுக்குச் சுவர், என்று காட்சிகள் ஒடுகின்றன.

அவளுள் ஒர் ஆசை உயிர்க்கிறது. இந்த எளிய குழந்தைகள். வறுமைக்கு நீங்களே காரணம் என்று குற்றம் சாட்டப்படும் குழந்தைகளைத் தீண்டி, நலம் செய்து, படிப்பித்து... இப்படி ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக...ஒ.அவள் யாருக்கும் கட்டுப்படாமல் இங்கு வாழ வரமாட்டாளா?.

இந்தச் சூழலில் ஒரு சிறிய பள்ளிக் கூடம். இந்த மக்கள் ஆத்மார்த்தமாக வழங்கக் கூடிய அன்பு.

மனசை இனிய கனவுகளில் இலயிக்க விடுகிறாள். ஊர்தி கங்கைக் கரையைக் காட்டுகிறது. மீண்டும் மறைந்து போகிறது. வெளியில் மிக உக்கிரமாக விழும் பொட்டலில் தகர அடுக்குகளாய் நெருங்கியுள்ள வாகனங்களிடையே குலுக்கிக் கொண்டு நிற்கிறது.

கிரிஜா குலுங்கினாற்போல் பார்க்கிறாள்.

ஒ...இந்த ஊர் இவ்வளவு நாகரீகமடைந்து விட்டதா? இருமருங்கும் கங்கை தெரியாதபடி அடைத்துக்கட்டிய கட்டிடங்கள், சாக்கடைகள், இரைச்சல்கள், மனித மந்தைகளாகச் சந்தைக் கூட்டங்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இவள் ஆசிரியர்களுடன் பயணம் வந்தாளே, அப்போது எவ்வளவு அழகாக இங்கே அமைதி ஆசிரமங்கள் திகழ்ந்தன? ஒ, அந்த ஆசிரமங்கள் இந்நாள் எங்கே மறைந்தன? பெரிய சாலை. நீள நெடுகச் செல்கிறது. உயர உயர விடுதிகள், குளிர்சாதன அறைகள், வசதி மிகுந்த படுக்கைகள், உணவு. வாருங்கள் என்றழைக்கும் ஆடம்பர விடுதிகள்...

கங்கைத்தாயே! நீ எங்கு மறைந்தாய்? பிரச்னைக்கு முடிவென்று அவள் எங்கே வந்து நிற்கிறாள்? வெயிலின் உக்கிரம் தாளவில்லை. காலையிலிருந்து நல்ல உணவு உண்டிராததால் பசி வயிற்றைக் கிண்டுகிறது.