முகவுரை.
கடல்புடைசூழ்ந்த நெடுநிலவுலகிலே தமிழ்ப்பூமியை மூன்று கூறிட்டு ஆண்ட "சூரியன், சந்திரன், அக்கினி" என்னும் முத்தேவர்களின் மரபோர்களில் சூரியன் மரபோரின் வரலாற்றை அறியவிரும்பி வடமொழியினின்று தென்மொழிக்கு வந்த "புராணங்களையும், இதிகாசங்களையும், தலபுராணங்களையும்" ஆராய்ந்துபார்த்தேன்; அவற்றுள் சரித்திர ஆராய்ச்சிக்கு வேண்டுவன சிறிதுமில்லை.
தமிழே முதனூலாகவுள்ள "சங்க நூல்களையும், திருமுறைகளையும், திருமொழிப் பிரபந்தங்களையும், கலிங்கத்துப்பரணி முதலிய நூல்களையும்" ஆராய்ந்ததில் சங்கநூல்களில் பல அரசர்களின் வரலாறுகளும், திருமுறைகளில் சில அரசர்களின் வரலாறுகளும், கலிங்கத்துப்பரணியில் சூரியகுமாரனாகிய மனு முதல் கலிங்கத்தைவென்ற குலோத்துங்க சோழன் மகனாகிய விக்கிரம சோழன் இறுதியாக பராக்கிரமமுடைய பல அரசர்களின் வரலாறுகளும் கூறப்பெற்றிருக்கின்றன.
"கல்வி, பொறை, கொடை புகழ், வாய்மை, பத்தி" முதலிய நற்குணங்களெல்லாம் ஒருருவாய்த்தோன்றிய தொண்டைமண்டலம் முதன்மையாராகிய களப்பாள் சீமான் சீ.இரங்கசுவாமி முதலியாரவர்களுடைய பொருளுதவியைச் சிரமேற்கொண்டு ஐயாண்டு தேசசஞ்சாரஞ்செய்து ஆங்காங்குள்ள "சிலாசாதனங்களையும், செப்புச்சாதனங்களையும்" பார்வையிட்டேன்; அவற்றுள் கரிகாலப்பெருவளவன் புதல்வனும், கலிகாலமுதல்வனும் ஆகிய இராசராசசோழன் முதல் கோனேரி மேல்கொண்டான் இறுதியாக எண்ணிறந்த அரசர்களின் வரலாறுகளும், கணக்கற்ற அரசர்களின் பட்டப்பெயர்களுமிருக்கின்றன.
தமிழர்களின் பட்டப்பெயர்களையும், தமிழ்ப்பழமொழிகளையும், தமிழ்க்கர்ணபரம்பரைக்கதைகளையும், தமிழ்ப்பெயருடைய "நகரங்கள்,ஊர்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கோயில்கள்,