பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.வி. சண்முகம் கல்வி மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் தலைமைச் செயலகம் சென்னை - 600 009 அணிந்துரை செ . "ஒரு மொழிக்குட்பட்ட சொற்களை ஆராயும் சொல்லாராய்ச்சியும் பல மொழிகளை ஒப்பு நோக்கும் மொழியாராய்ச்சியும் மேனாட்டாரிடமிருந்து நாம் அறிந்தவை. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல். சொல்.எச்.1) என்று தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் ஓரளவு தமிழ்நாட்டிலிருந்ததேனும் விரிவான முறையிலும், நெறிப்பட்ட வகையிலும் சொன்னூலும் (Etymology), மொழிநூலும் (Philology) நாம் பெற்றது மேலையரிடமிருந்தே". இது, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்ற நூலைச் சேலத்திலிருந்து 1948-இல் வெளியிட்டபோது, அந்நூலில் அவரே எழுதிய முகவுரை. ஆகப் பல்லாண்டுகளாகச் சொல்லாராய்ச்சியிலேயே தம்மை ஆட்படுத்திக் கொண்டு, நுணுகி நுணுகித் துருவித் துருவிப் பார்த்ததன் தெள்ளிய வெளிப்பாடுதான் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. அதன் வாயிலாகத் தமிழின் சொல்வளத்தை நாம் அறிகின்றோம். அத்துடன் நில்லாது தொன்றுதொட்டு இன்று வரையுமுள்ள பண்பாடு, நாகரிகம், வரலாறு ஆகியவற்றையும் அறிய முடிகிறது. தமிழ் பிறமொழியின் கலப்பில்லாமல் தனித்தியங்கும் ஆற்றலுடைய தன்னிகரில்லா மொழி என்று உலக மொழியறிஞர்களெல்லாம் ஒப்புக் கொள்கின்றனர். செந்தமிழின் நீண்ட நெடிய சொல்வள வரலாற்றில் சொல்லும் பொருளும் பெருகியுமுள்ளன; அருகியுமுள்ளன! வழக்கிழந்த சொற்களை மீட்பதற்கும், அனைத்துச் சொற்களையும் காப்பதற்கும் அகரமுதலிகள் இன்று வழிவகுக்கின்றன. இலக்கியச் சொல்லாட்சிகள் முதலாக இன்றைய பேச்சு வழக்குச் சொல்லாட்சிகள் ஈறாக அனைத்தையும் உள்ளடக்கிச் சொற்களின் வடிவம், பொருள், பிறப்பு போன்றவை பற்றிய தேவையான செய்திகளுடன் விளக்கமுற உரைப்பவையாக இருப்பவையே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் மடலங்கள். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு விழா கண்ட நம் புரட்சித் தலைவி மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் சீரிய தலைமையில் அமைந்த அரசு, அவரின் தனித்தமிழ்ப் பற்றினைப் பேணிக் காத்திடவும், அவர் காட்டிய நெறிமுறைகளின்படி அகரமுதலி மடலங்கள் வெளிவரவும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று இந்தியாவிலேயே தலைசிறந்த முதன்மை மாநிலமாக மாற்றிடச் சூளுரைத்துச் செயற்பட்டு வரும் புரட்சித் தலைவி மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி தமிழக அரசு முனைந்து பீடுநடை போடுகின்றது.