பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

செந்தமிழ் பெட்டகம்

தவிர இரண்டாம் எழுத்து முதலியன கவனிக்கப்படவில்லை அம்முதல் ஒரு பெயர், அம் முதல் இரு பெயர் என்று இவ்வாறு இந்நூற் சூத்திரங்கள் அமைந்துள்ளன

பிங்கலந்தை முறையைப் பெரிதும் தழுவிச் செய்யப் பெற்ற கைலாச நிகண்டு என்பதின் பதினோராந் தொகுதியில் ஒரெழுத் தொருமொழி, ஓரெழுத் தொற்றொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, மூவெழுத்தொருமொழி, மூவெழுத்தொற்றொருமொழி, நாலெழுத்தொற்றொரு மொழி என்று ஏழு பகுப்பு உடையதாக உள்ளது ஒரெழுத் தொற்றொரு மொழியில் மட்டும் அகராதி முறை காண்கிறது. இதன் பின்னர் மிகவும் எளிதான முறையைப் பின்பற்றிப் பல் பொருட் சூடாமணி என்ற நிகண்டு அகராதி தோன்றியுள்ளது இதனை இயற்றிய ஈசுர பாரதியார் அமரகோசம் என்னும் வடநூலைப் பின்பற்றி இதனைச் செய்துள்ளார் தமது நூலை மூன்று காண்டங்களாகப் பகுத்து, முதற் காண்டத்தை ஒரு சொல் ஒரு பெயர்த் தொகுதியாகவும், இரண்டாம் காண்டத்தை ஒரு சொல் பல் பொருட் பெயர்த் தொகுதியாகவும், மூன்றாம் காண்டத்தைப் பல் பொருட் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியாகவும் அமைத்துள்ளனர்

இதன் பின்னர், வீரமாமுனிவரின் சதுரகராதி இயற்றப்பெற்றது. இது நிகண்டுகள் தரும் சொற் பொருளை அகராதி முறையில் தொகுத்துத் தந்துள்ளது இவர் தமது நூலைப் பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி என்று நான்கு வகைப்படுத்தியுள்ளார் சதுரகராதி மிகவும் பயனுள்ள கருவி நூலாகும் இது தோன்றிய பின்னும் அகராதிக் கிரமத்தில் எழுந்த நிகண்டு நூல் பொதிகை நிகண்டு இதில் மொழி முதல் எழுத்தில் அகராதிக் கிரமம் மேற்கொண்டதோடு, இரண்டாம் எழுத்துகளும் ஒரு மெய் அல்லது உயிர்மெய்யெழுத்தின் நியதியைப் பின்பற்றியிருக்கிறது நிகண்டு நூலை அகராதியோடு ஒத்த நிலையிற் கொண்டுவருவதற்கு மேற்கொண்ட முயற்சியில் இது மிகவும் சிறப்பாக அமைந்த நூலாகும்