பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

233


ரவீந்திரர் இலக்கியத் தொண்டு :

பங்கிம் சந்திரர் சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் மட்டுமே சிறந்து விளங்கிய வங்க மேதை. ஆனால் ரவீந்திரர் கலை, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை இப்படிப் பல துறைகளிலும் ஊக்கம் செலுத்தி ஒவ்வொன்றிலும் கைதேர்ந்தவர் என்று பெயர் எடுத்தார். வங்காளத்திலே பிற்காலத்தில் தோன்றிய எழுத்தாளர்களுக்கு இவர் வழிகாட்டியாக இருந்தார். அவர்களுக்குத் தாமே ஊக்கம் அளித்து வந்தார். சிறந்த வங்க நாவலாசிரியராக இருந்த சரத்சந்திரரைப் பார்த்து. ஒரு சமயம் யாரோ ஒருவர், “நீங்கள் எழுதுவது எங்களுக்கு எளிதில் விளங்குகிறது. ரவீந்திரருடைய எழுத்துக்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லையே!” என்று கேட்டாராம். அதற்குச் சரத்சந்திரர், “உண்மைதான். நான் உங்களுக்காக எழுதுகிறேன்; ரவீந்திரர் எங்களுக்காக எழுதுகிறார்” என்றாராம். இதைவிடச் சிறந்த பாராட்டு வேறு வேண்டுமா?

ரவீந்திரருடைய கவிதைத் தொகுதிகளில் முதலிலே வெளியானவை வடமொழிக் கருத்துகள் செறிந்தவை; பலவகைச் சந்தங்களில் அப்பாடல்கள் அமைந்துள்ளன. நாளாக ஆக இவருடைய கவிதைகளில் ஆழ்ந்த உபநிடதக் கருத்துக்களும், பழைய வைணவ பக்தர்கள் பாடிச் சென்ற பதாவளிகளில் காணும் சில கருத்துகளும் இடம் பெற்றன. வங்காளத்திலே இன்ன மதம் என்று குறிப்பிட முடியாத, பாவுல்’ என்ற ஒரு சம்பிரதாயத்தார் உண்டு. இவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ரவீந்திரர். இதனால் பரந்த நோக்கம் கொண்ட அந்தச் சம்பிரதாயத்தினரின் கருத்துகளையும் இவர் ஏற்றுக் கொண்டார். இவருடைய கவிதைத் தொகுதிகள் மிகப்பல; அவற்றுள் முக்கிய மானவை: கீதாஞ்சலி, கேயா (ஆற்றைக் கடத்தல்), நைவேத்தியம், பலாகா (கொக்குக் கூட்டம்), மஹுவா (இலுப்பை மலர்), கணிகா (துணுக்கு), சயனிகா (திரட்டு),