பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

39


இக்காவியத்தில் குமரன் பிறப்பு வரை சிருங்காரமும், பின்னர் வீரமும் பிரதான ரசங்களாகும். காளி என்ற சொல்லுக்குக் குமரன் என்ற பொருள் என்றும், குமரனைக் காளிதாசர் வழிபடும் பிரதான தெய்வமென்றும், அதனாலேயே அவர் குமார சம்பவம் என்ற இக் காவியத்தை எழுதினார் என்றும், தெய்வங்களின் கூடலை வருணித்ததைக் கண்டித்த பெரியோரின் கூற்றை உன்னியே காளிதாசர் எட்டுச் சருக்கத்துடன் இக்காவியத்தை நிறுத்திவிட்டார் என்றும், சிலர் கூறுவர். இது இரகுவமிச காவியத்திற்கு முன்னரே எழுதப் பெற்றது என்றாலும், சிலவிடங்களில் இதன் அழகு இரகுவ மிசத்தை மீறி நிற்கின்றது என்பது பலர் துணிபு.

கிராதார்ஜூனியம் :

இது கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பாரவி என்ற மகாகவியால் இயற்றப்பெற்றது. பாரவி காஞ்சியில் சிம்மவிஷ்ணு என்ற பல்லவ அரசனுடைய சபையில் பண்டிதராயிருந்தரெனக் கூறுவர். இக்காவியத்தில் பாண்டவர் துவைதவனத்தில் வசிக்கும் போது அருச்சுனன் பின்னர் வரப்போகும் யுத்தத்தில் உதவுவதற்காகச் சிவபிரானிடமிருந்து பாசுபதம் என்ற படையைப் பெற்ற கதை கூறப் பெறுகிறது. இதில் 18 சருக்கங்கள் உள்ளன.

முதற் சருக்கத்தில் துரியோதனன் ஆட்சி முறையை உளவறிந்து வருவதற்காகத் தருமரால் அனுப்பப் பெற்ற ஒற்றன் தான் கண்டதைக் கூறுகின்றான். இரண்டாம் சருக்கத்தில் பீமனும் திரெளபதியின் கூற்றை ஒட்டியே யோசனை கூறத் தருமன் பொறுத்திருந்து பார்ப்பதே மேல் என்கிறார். மூன்றில் வியாசரின் அனுமதியின் பேரில் அருச்சுனன் இமயமலைக்குத் தவம் செய்யச் செல்கின்றான் நான்கில் சரத் இருது வருணனையும், ஐந்தில் இமயமலை வருணனையும் வருகின்றன.