பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
209
 

அஞ்சும் அச்சம் குற்றமெனவும் அறநூல்கள் கூறுகின்றன. குற்ற மான அச்சம் இருத்தல் கூடாது என்பது அறவோர் துணிபு. இதனால் தான், ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்றார் திருவள்ளுவர். பாரதியாரும் அச்சம் தவிர் என்றார்.

உரிமை வாழ்வில் அவரவர் உரிமைக்குக் கேடுண்டாகுமோ என அஞ்சும் அச்சம் இருத்த லாகாது. பெரும்பான்மையோர் கருத்து மேலோங்கும் வகையில் சிறுபான்மையோர் உரிமை பறிக்கப்படுமென்னும் அச்சம் அச்சிறுபான்மையோர்க்கு உண்டாகக் கூடாது. இவ்வாறே வலியோர் மெலியோரை நலிவதாலும், செல்வர்கள் வறியோர்களை வருத்துவதாலும், வலிமிக்க நாட்டவர் அது குறைந்த நாட்டவரை அடர்ப்பதாலும், இடஞ் சிறிதென்று பிறர் மண்ணைக் கவரும் பெருநசையாலும் உரிமை வாழ்வுக்கு ஊறுண்டாகும். அதுபற்றி மக்கட்கு அச்ச முண்டாதல் ஒருதலை. வலியோராலும் செல்வர்களாலும் உண்டாகும் அச்சம், அரசியலின் செவ்விய நேர்மையால் நீங்கும். பண்டைத் தமிழ் வேந்தர், செல்வரென்றும் வலிய ரென்றும் கருதி ஒரு சிலர்க்குச் சலுகை மிகத் தருதலும், வறியரென்றும் மெலியவ ரென்றும் கருதி ஒரு சிலரைப் புறக்கணித்தலும் இலர். இதனால் உண்டாகும் பொருள் வேந்தர்க்கு இம்மை மறுமை இருமையும் கெடுக்கும் என்பது அவர் கருத்து. ‘செம்மையின் இகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொருள், இம்மையும் மறுமையும் பகையாவதறிதியோ’ (கலி. 14) என்றும், அல்லற் பட்டாற்றாதழுதகண்ணிரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்றும் எடுத்தோதுவது காண்க. இதனால், எளியவர்கள் தமக்கு வலியவரால் துன்ப முண்டாயின், அவர்முன் அச்ச மின்றிக் கண்ணறப் பேசும் காட்சியுடையராய் இருந்தனர். சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் தாமப் பல்கண்ணனா ரென்னும் சான்றோரும் வட்டாடினர். அப்போது மாவளத்தான், தன் செல்வச் செருக்கால் சினங்கொண்டு தான் ஆடிய வட்டினால் பல்கண்ணனாரை எறிந்து வருத்தினான். அவர், அவன் செல்வச் சோழ வேந்தன் தம்பி யென்றும் பாராது, சிறிதும் அச்சமின்றி,

‘நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்,
தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐய முடையேன்

செ.14