பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
264
செம்மொழிப் புதையல்
 


நமக்குக் கடமையாகும். நம்மிலும், ‘'சீறாப்புராணம்’ என்னும் தீவிய செந்தமிழ்க் காவியமும், ‘நாகூர்ப்புராணம்’ என்னும் நலஞ் செறி புராணமும் பெற்ற தமிழறிஞர், இசுலாம் சமயத்தவர் நம் தமிழ்க்காற்றிய பெருந்தொண்டினை யறிந்து மகிழும் பெருந்தகைகளாதலின், அவர்கள், இச்சமயத்தவர் நம் இந்திய நாட்டிற்கே செய்துள்ள பெரும் பணிகளைத் தெரிந்து போற்றும் சிறப்புடையவர் எனக் கருதுகின்றேன்.

இசுலாம் சமயத்தவர் முசல்மான்கள் எனவும், மகமதியர் எனவும் நம் நாட்டில் வழங்கப்பெறுவர். அவர்கள் மேற் கொண்டிருக்கும் இசுலாம் சமயமும் முகமதியமதம் என்றும் கூறுப்படும். இச்சமயம், புத்தசமயம், சமணசமயம்போல, இந்து சமயத்தினின்று முளைத்த கிளைச்சமயமன்று; இது, சிறிது காலத்துக்கு முன்பு நம் நாட்டிற்குப் போந்து பரவிருக்கும் கிறித்தவ சமயத்துக்கும் முன்னர் நம் நாட்டிற்குப் போந்து சிறப்பெய்திய சமயமாகும். நம் நாட்டுச் சமய நூல்களுட் கூறப்படும் அறுவகைப்பட்ட அகச்சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், புறப்புறச்சமயம் என்ற சமயத் தொகைவகை விரிகளில், இஃது இடம்பெறாமைக்கும் இதுவே காரணமாகும். இதற்கும் கிறித்தவ சமயத்துக்கும் முதற்சமயம் யூதசமயம் என்று கூறுப. அவ்யூதசமயம், இந்தியநாட்டிற் பிறந்து தழைத்த சமயமன்று; அதனால், அதனைப்பற்றி நம் நாட்டுச் சமயக் க்ணக்கர்கள் ஆராய்ச்சி செய்திலர். பிற்காலத்துப் போந்த சமயப் புலவர்களும் அவ்வராய்ச்சியினைச் செய்யாதொழிந்தனர், செய்திருப்பாராயின், நம் சமூகத்தில் பிரிப்பின்றி வாழும் சைனர், புத்தர் முதலியவர்களைப்போல, இச்சமயத்தவர்களும் நம்மொடு பிரிப்பறக் கலந்துகொண்டிருப்பர். ஆனால், இதற்கு வேறு காரணம் கூறுபவரும் உண்டு. ஆயினும் அஃது அத்துணைச் சிறப்பாக இல்லை. அதனையும் பின்னர்க் கூறுவோம்.

இசுலாம் என்பது ஒருதெய்வக் கோட்பாட்டைக் கடைப் பிடியாகவுடைய பெருஞ் சமயமாகும். புறச்சமயங்களையும் பலதெய்வக் கோட்பாடுகளையும் எவ்வகையிலும் ஏலாதது; பரம் பொருள் ஒன்றைத் தவிரப் பிற எவற்றையும் வணங்குதற்கு மக்களைப் பணியாத பண்பு மேம்பட்டது; கிறித்தவ சமயமும் இந்நிலையில் இதனோடு ஒத்த இயல்புடையது. இவையிரண்டற்கும் தாய்ச்சமயமாக இருந்த யூதசமயம்போல, இவையுணர்த்தும் இயவுள், ஏனைத் தெய்வங்கள் உளவெனும் எண்ணுதற்கும் இடந்தராத உயர்கடவுள் என்னின் அது