பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாக்கில் நீர் ஊறச்செய்த ஆசை—இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல்—எனும் எதைத்தான் சொல்ல முடியும்? கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லி விட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக்குலை! அவருடைய அந்தஸ்துக்கு இது ஒரு பிரமாதமா!—என்று ஊர் ஏசுகிறது போல் அவன் கண்களுக்குத் தெரிகிறது.

'அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன்—மாடு மிதித்து விடாதபடி பாதுகாத்தேன்-செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டு போல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய். அப்பா! தங்கச்சிக்குக் கூட, 'உசிர்' அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது ஏமாற்றுகிறாயே. நாங்கள் என்னப்பா, உன்னை கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!—என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், 'குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?' என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தனர்! எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான். 'அப்பா, குலையை வெட்டப் போறாரு—செவ்வாழைக்குலை' என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளி-

10