உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட, இறப்பதே மேல் என்ற துணிவு பிறந்துவிட்டது. ஒரு நடு நிசியில், மனோவேதனை அதிகப்படவே, கூரிய கத்தி கொண்டு, தற்கொலை செய்துகொண்டு இறந்தான்.

சீமான், புரண்டழுதான்; ஊரே கோவெனக் கதறிற்று. இன்னமும் கொஞ்ச நாளைக்கு நாக்கிழந்தார் இருக்கக் கூடாதா? நாடு சீர்படுமே, என்று 'பக்தர்கள்' கை பிசைந்தனர். மடம் கட்டப்பட்டு, படம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சீமான் கோபாலசாமி, கோயில் தர்மகர்த்தா வேலையை ராஜிநாமாச் செய்துவிட்டு, மடத்தின் அதிபரானார். ஆண்டுதோறும் நாக்கறு விழா நடைபெறுகிறது; சீடகோடிகளின் காணிக்கை குவிகிறது. எங்கே? என்று கேட்பீர்கள்!

பெரும் புளுகு என்றுரைப்பீர்கள்! கட்டுக்கதை என்று பேசுவீர்கள். இஷ்டம்போல் எண்ணிக் கொள்ளுங்கள்.

1943-ம் ஆண்டிலே ஏப்ரல் மாதத்திலே, சுதேசமித்ரன், வடநாட்டிலே ஏதோ ஓர் கோயிலிலே, ஒரு வாலிபன், தெய்வபக்தி காரணமாகத் தன் நாக்கை அறுத்துக் கொண்டான், என்றோர் செய்தியை, பக்திசிரத்தையுடன், பரோபகார சம்ரட்சணார்த்தம் வெளியிட்டது. அந்தப் பக்தன், ஏன் தன் நாவைத் துண்டித்துக் கொண்டானோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் தீட்டியுள்ள கதையில் வரும் பஞ்சை போன்றவர்கள் நாக்கைத் துண்டித்துக் கொள்ளத் தயங்கவுமாட்டார்கள். சூது சூட்சி தெரிந்தவன், நாக்கிழப்பவனைக் கொண்டு, பணம் திரட்டவும் கூசான். நாடு, அவன் கட்டிவிடும் கதையைக் கேட்டு ஏமாறவும், பொருள் தரவும், தயாராகத்தான் இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். ஆனால் சிந்தனைக்கு வேலை தந்தால், “ஆம்”

45