பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சேக்கிழார் தந்த செல்வம் இச் செவிச்செல்வம் ஒரு படி உயர்ந்தது என்று கூறும் முறையில், - செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை (குறள்-41) என்று கூறுகிறார். பொருட்செல்வம் முதலிய அனைத்தும் எவ்வாறு நமக்குப் பயன் தருகின்றன? நாம் அடைய விரும்பும் மகிழ்ச்சியை, இன்பத்தை, மனநிறைவைப் பெறு வதற்கு இச்செல்வங்கள் பயன்படுகின்றன. மகிழ்ச்சி, இன்பம் முதலியவற்றை அடைவதற்கு இச் செல்வங்கள் துணைபுரிகின்றன என்றால், இவை நேரிடையாகவும், வழியாகவும், மறைமுகமாகவும் உதவுகின்றன என்பதே பொருளாகும். வீடு, மனை, உடை, உணவு என்பவை நிறையும்பொழுது மனத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது. இவற்றைப் பெறப் பொருட் செல்வம் உதவுகின்றது. எனவே, மனத்தில் நிறைவைத் தர உதவுகின்ற இவற்றைச் செல்வம் என்று கூறுகிறோம். பல சமயங்களில் இவை அனைத்தும் இருந்தும்கூட மனத்தில் அமைதி ஏற்படுவதில்லை. எனவே, மனத்தில் ஏற்படும் அமைதி அல்லது நிறைவையே செல்வம் என்று கூறுகிறார் குமரகுருபர சுவாமிகள், "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” சிதம்பர மும்மணிக் கோவை-26:20) என்பது அவரது பொன்வாக்காகும்.